Horoscope: குழந்தைகளுக்கு எந்த வயதில் ஜாதகம் எழுத வேண்டும்? தேசமங்கையர்கரசி கொடுத்த விளக்கம்

Published : Aug 03, 2025, 02:48 PM IST

குழந்தைகளுக்கு ஜாதகம் எழுதுவது ஒவ்வொரு குடும்பத்தின் நம்பிக்கை மற்றும் வழக்கத்தை பொறுத்து மாறுபடலாம். ஆனால் குழந்தைகளுக்கு எந்த வயதில் ஜாதகம் எழுத வேண்டும் என்பது குறித்து தேச மங்கையர்க்கரசி விரிவான விளக்கங்களை அளித்திருக்கிறார்.

PREV
16
குழந்தைகளுக்கு ஜாதகம் எப்போது எழுத வேண்டும்?

ஜாதகம் என்பது ஒருவரின் பிறப்பு நேரத்தில் வானத்தில் உள்ள கோள்களின் நிலைப்பாடுகளைக் கொண்டு வரையப்படும் ஒரு வரைபடமாகும். ஒவ்வொரு கோளும் எந்த ராசியில், எந்த வீட்டில் இருந்தன என்பதை இந்த கணிப்பு விளக்குகிறது. இந்திய ஜோதிட முறைப்படி ஒருவரின் ஜாதகத்தை வைத்து அவர்களது கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள முடியும். ஒருவருடைய ஆளுமை, உடல்நலம், கல்வி, தொழில், திருமணம், செல்வம், உறவுகள் போன்ற வாழ்வின் பல்வேறு அம்சங்களை ஆராய ஜாதகம் உதவுகிறது. ஆனால் தற்போது பலருக்கும் ஜாதகம் எழுதுவது குறித்து பல சந்தேகங்கள் நீடிக்கிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு எந்த வயதில் ஜாதகம் எழுத வேண்டும், பலன்கள் எப்போது பார்க்க வேண்டும் என்பது குறித்து பல குழப்பங்கள் நீடிக்கிறது.

26
ஜாதகம் எழுதுவதற்கு பின்பற்றப்படும் இரு முறைகள்

பொதுவாக ஜாதகம் எழுதுவதற்கு இரண்டு முறைகள் பின்பற்றப்படுகின்றன. சில குடும்பங்களில் குழந்தைகள் பிறந்த உடனேயே அவர்களுடைய ஜாதகத்தை எழுத வேண்டும் என்று கருதுகின்றனர். இது குழந்தையின் நட்சத்திரம், ராசி, ஆரம்ப கால வாழ்க்கைப் பலன்களை அறிந்து கொள்ள உதவும். மேலும் குழந்தையின் பெயரை தேர்ந்தெடுப்பதற்கும் இது உதவலாம். சிலர் குழந்தை பிறந்த 10 முதல் 12 வயது வரை ஜாதகத்தை கணக்கிட்டு பார்க்க கூடாது என்று கருதுகின்றனர். இது குழந்தைகள் வளரும் நிலை என்பதால் அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் இயற்கையான நிகழ்வுகள் என்றும், ஜாதகம் பார்த்து பயப்பட தேவையில்லை என்றும் கருதுகின்றனர். இந்த நிலையில் பிரபல ஆன்மீக சொற்பொழிவாளரான தேச மங்கையர்க்கரசி குழந்தைகளுக்கு எப்போது ஜாதகம் எழுத வேண்டும் என்பது பற்றிய விரிவான விளக்கங்களை அளித்துள்ளார்.

36
தேச மங்கையர்கரசி அளித்த விளக்கம்

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது, “குழந்தைகள் பிறந்த உடனேயே அந்த நேரத்தை குறித்து வைத்துக்கொண்டு ஒரு ஜோதிடரை அணுகி நேரத்தைக் கொடுத்தால் அவர் ராசி, நட்சத்திரம், திதி, நேரம் ஆகிய அனைத்தையும் குறித்து கொடுத்துவிடுவார். ஆனால் இந்த தகவல்களை அடிப்படையாக வைத்து கட்டம் போட்டு ஜாதகம் எப்போது எழுத வேண்டும் என்கிற சில பொது நியதிகள் உள்ளன. சில குடும்ப வழக்கத்தில் குழந்தைகள் பிறந்த உடனேயே ஜாதகம் எழுதுவது வழக்கம். அந்த வழக்கம் உள்ளவர்கள் குடும்ப வழக்கத்தை மறக்காமல் பின்பற்றுங்கள். முன்னோர்கள் சொல்லிக் கொடுத்ததை மாற்றக்கூடாது. அதே சமயம் இது போன்ற குடும்ப வழக்கம் தெரியாதவர்கள் பொது நியதியை பின்பற்ற வேண்டும்.

46
12 வயது வரை பலன்கள் பார்க்கக்கூடாது

அதன்படி ஆண் குழந்தையாக இருந்தாலும் பெண் குழந்தையாக இருந்தாலும் குழந்தை பிறந்து ஓர் ஆண்டு நிறைவடைந்த பின்னரே ஜாதகம் எழுத வேண்டும். ஜாதகம் எழுதி முடித்த பின்னர் குழந்தைகள் இரண்டு அல்லது மூன்று வயது ஆன உடனேயே ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஜோதிடர்களை அணுகி பலன்கள் கேட்பது கூடாது. பல ஜோதிடர்கள் இளம் வயது பாலகர்களுக்கு பலன்கள் கூறுவது கிடையாது. ஏதாவது உடல்நலப் பிரச்சனை அல்லது பிற பிரச்சனைகள் என்றால் மட்டுமே குழந்தைகளின் ஜாதகத்தை ஜோதிடரிடம் காண்பித்து பலன்கள் பார்க்க வேண்டும். எந்த பிரச்சனையும் இல்லை என்றால் 12 வயது வரை பலன்கள் பார்க்கக் கூடாது. பாலகர்களாக இருப்பவர்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் தெய்வ சங்கல்பத்தின்படியே நடப்பதால் குழந்தைகளுக்கு ஜோதிடப் பலன்கள் பார்த்தால் கூடாது.

56
தேவைப்படும் பட்சத்தில் மட்டும் பார்க்கலாம்

அதேசமயம் பெண் குழந்தைகளுக்கு இதில் சில விதிவிலக்குகள் உண்டு. பெண் குழந்தைகள் பிறந்து ஒரு வயதில் ஜாதகம் எழுதி வைத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் பூப்படையும் வயது வரை பலன்கள் பார்த்தல் கூடாது. அதே சமயம் பூப்படைந்த பின்னர் அந்த நேரத்தை குறித்துக்கொண்டு ருது ஜாதகம் எழுதி வைத்துக்கொள்ள வேண்டும். சில மணமகன் வீட்டார் ருது ஜாதகம் கேட்கும் பட்சத்தில் இது பின்னாளில் பலனளிக்கலாம். ஆண் குழந்தைகளுக்கு ஜாதகம் எழுதி அதை பூஜை அறை அல்லது பீரோவில் வைத்து விடுதல் நல்லது. 12 வயது முடிந்த பின்னர் பலன்கள் பார்க்கலாம். அதுவும் தேவை ஏற்பட்டால் மட்டுமே பார்க்க வேண்டும். வெளிநாடு செல்லுதல், வேலைக்காக பிற இடங்களுக்குச் செல்லுதல், உயர் படிப்பு போன்ற அவசர தேவைகளுக்காக ஜாதகத்தை வெளியில் எடுக்கலாம். இல்லையென்றால் திருமணத்தின் போது பொருத்தம் எடுப்பதற்கு வெளியில் எடுத்தால் போதுமானது என தேசமங்கையர்கரசி விளக்கியுள்ளார்.

66
இறுதியாக,
  1. ஆண் குழந்தைகளாக இருந்தாலும், பெண் குழந்தைகளாக இருந்தாலும் ஒரு வயது பூர்த்தியான பின்னரே ஜாதகம் எழுத வேண்டும்.
     
  2. எந்தக் குழந்தையாக இருந்தாலும் 12 வயது வரை பலன்கள் பார்க்கக் கூடாது. 12 வயதிற்கு மேல் ஏதாவது தேவைகள் இருந்தால் மட்டுமே பார்க்க வேண்டும்.
     
  3. ஒருவேளை 12 வயதிற்குள் குழந்தைகளுக்கு அடிக்கடி ஏதாவது உடல்நலப் பிரச்சினைகள் அல்லது பிற பிரச்சனைகள் ஏற்பட்டால், அந்த சமயத்தில் மட்டும் பலன்களை அறிந்து கொள்ளலாம்.
     
  4. பெண் குழந்தைகளாக இருந்தால் பூப்படையும் தருணத்தில் ருது ஜாதகம் எழுதி வைத்துக்கொள்ள வேண்டும்.
     
  5. எந்த தேவையும் ஏற்படவில்லையென்றால் இரு குழந்தைகளுக்கும் திருமணத்தின் போது பொருத்தம் பார்ப்பதற்கு ஜாதகத்தை வெளியில் எடுத்தால் போதுமானது.
Read more Photos on
click me!

Recommended Stories