
ஜோதிடத்தின்படி செவ்வாய் தோஷம் என்பது திருமண வாழ்க்கையை பாதிக்கக்கூடிய ஒரு முக்கிய தோஷமாக கருதப்படுகிறது. ஒருவரது பிறந்த ஜாதகத்தில் செவ்வாய் பகவான் குறிப்பிட்ட இடங்களில் அமைந்திருந்தால் இந்த தோஷம் ஏற்படுவதாக நம்பப்படுகிறது. செவ்வாய் கிரகமானவர் தைரியம், வீரம், ஆக்ரோஷம், ஆற்றல், உடன் பிறந்தவர்கள், நிலம் மற்றும் சொத்துக்களை குறிக்கும் கிரகமாகும். பெண்களுக்கு இது கணவனை குறிக்கும் கிரகமாகவும் கருதப்படுகிறது.
ஒருவரது ஜாதகத்தில் லக்னம் அல்லது லக்னத்தில் இருந்து 2,4,7,8,12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் அமைந்திருந்தால் அது செவ்வாய் தோஷம் இருப்பதாக கூறப்படுகிறது. 7 ஆம் இடமானது களத்திர ஸ்தானமாக கருதப்படுகிறது. இது திருமண உறவு, வாழ்க்கை துணையைப் பற்றியது. இங்கு செவ்வாய் பகவான் இருப்பது கடுமையான தோஷமாக கருதப்படுகிறது. 8 ஆம் இடம் என்பது மாங்கல்ய ஸ்தானம், ஆயுள், தாம்பத்திய வாழ்க்கை ஆகியவற்றை குறிக்கிறது. 2,4,12 ஆகிய இடங்கள் குடும்பம், உடல்நலம் போன்றவற்றில் ஏற்படும் பாதிப்புகளை குறிக்கிறது.
செவ்வாய் தோஷம் இருப்பவர்களுக்கு பொதுவாக திருமணத்தில் தாமதங்கள் ஏற்படலாம். திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள், சண்டைகள் அல்லது பிரிவுகள் ஏற்படலாம். கோபம், ஆக்ரோஷம், அதீத உணர்ச்சி வேகத்துடன் இருப்பது போன்ற குணங்களுடன் விளங்கலாம். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், அதே செவ்வாய் தோஷம் உள்ள ஒருவரை திருமணம் செய்வதன் மூலம் தோஷத்தின் தாக்கம் குறையும் அல்லது தோஷம் நிவர்த்தி ஆகும் என்று ஜோதிட ரீதியாக நம்பப்படுகிறது. இருப்பினும் மற்ற கிரகங்களின் நிலைகள் மற்றும் பார்வை ஆகியவற்றை பொறுத்து தோஷத்தின் வீரியம் மாறுபடும்.
ஆனால் செவ்வாய் தோஷம் ஒருவருக்கு தீய பலன்களை மட்டுமே கொடுக்கிறது என்பதில் ஆதாரப்பூர்வமான உண்மை இல்லை. செவ்வாய் தோஷம் இருக்கும் நபர்கள் ஆளுமைத் திறனில் மிகவும் சிறந்தவர்களாக விளங்குகின்றனர். செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் செவ்வாய் தோஷம் இல்லாத நபர்களை திருமணம் செய்தால் அவர்களின் வாழ்க்கை மோசமாகி விடாது என்பதையும் கண்கூடாக காண முடிகிறது. அதேபோல் செவ்வாய் தோஷம் இருப்பவர்கள், தோஷம் இல்லாதவர்களை திருமணம் செய்தால் பிறக்கும் குழந்தைகள் குறைகளுடன் பிறக்கும் என்ற நம்பிக்கையும் பொய்யாகிப் போகிறது.
செவ்வாய் தோஷம் இருப்பவர்கள், செவ்வாய் தோஷம் இருப்பவர்களை திருமணம் செய்து கொண்ட போதிலும் அவர்கள் வாழ்க்கை அவ்வளவு சிறப்பானதாக அமைந்துவிடுவது இல்லை. எனவே செவ்வாய் தோஷம் குறித்த மக்களிடையே நிலவும் கருத்துக்கள் மூடநம்பிக்கைகளாகவே கருத்தில் கொள்ளப்பட வேண்டும். செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் வாழ்க்கை மோசமாக இருக்கும் என்பதற்கான எந்த சான்றுகளும் இல்லை. ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருப்பதாக சொன்னால் மன குழப்பங்களை விட்டுவிட்டு, இறைவனை முழுமையாக நாட வேண்டும். இறைவன் அருள் இருந்தால் ஜாதகத்தையும் தாண்டி வாழ்க்கையில் எந்த நிலைக்கும் செல்லலாம்.
இருப்பினும் செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் சில பரிகாரங்களை செய்வதன் மூலம் அதன் வீரியத்தை குறைக்க அல்லது நிவர்த்தி செய்ய முடியும். செவ்வாய் கிரகத்தின் அதிபதியும் முருகப்பெருமான் என்பதால் தினமும் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வழிபடுவது சிறந்த பரிகாரமாகும். முருகன் கோவிலுக்கு சென்று சிவப்பு நிற மலர்கள் சாற்றி கந்தசஷ்டி கவசம், திருப்புகழ் போன்றவற்றை பாராயணம் செய்யலாம். செவ்வாய்க்குரிய நவக்கிரக தலங்களான வைத்தீஸ்வரன் கோயிலுக்கு சென்று வழிபடுவது செவ்வாய் தோஷ நிவர்த்திக்கு உதவும்.
நவகிரகங்களால் ஏற்படும் எந்த ஒரு தடைகளையும் நிவர்த்தி செய்யும் வல்லமை விநாயகப் பெருமானுக்கு உண்டு. எனவே சதுர்த்தி திதியில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபடலாம். செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கை அல்லது காளியை வணங்குவதும் நன்மை தரும். செவ்வாய்க்கிழமைகளில் ஏழைகளுக்கு சிகப்பு நிற ஆடைகள், தாம்பூலம் ஆகியவற்றை தானமாக கொடுக்கலாம். விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்வது, வறுமையில் வாடும் சகோதரர், சகோதரிகளுக்கு உதவி செய்வது போன்றவை நேர்மறை பலன்களைக் கூட்டும்.
வளர்பிறை செவ்வாய் கிழமைகளில் விரதம் இருந்து செவ்வாய் பகவான் அல்லது முருகனை வழிபடலாம். அனுபவமிக்க ஜோதிடரை அணுகி செவ்வாய் தோஷ நிவர்த்திக்கான சிறப்பு ஹோமங்கள் அல்லது பூஜைகளை மேற்கொள்ளலாம். வீட்டில் வில்வம், வன்னி போன்ற மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பது செவ்வாய் தோஷத்தின் பாதிப்புகளை குறைக்க உதவும். வீட்டில் மரம் நட்டு பராமரிக்க முடியாதவர்கள் கோவிலில் அமைந்துள்ள வில்வம் அல்லது வன்னி மரங்களுக்கு பூஜை செய்யலாம்.
உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை துல்லியமாக அறிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி சரியான பரிகாரங்களை செய்வது தோஷங்களை குறைக்க உதவும். சரியான பரிகாரங்கள் மற்றும் வழிபாட்டு முறைகளுக்கு அனுபவம் வாய்ந்த ஜோதிடரை அணுகி, அவரது ஆலோசனைப்படி செய்வது நல்லது.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)