
ஜோதிடத்தில் கிரகண யோகம் என்பது ஒருவருடைய ஜாதகத்தில் கேது-சந்திரன் அல்லது ராகு-சந்திரன் ஆகிய கிரகங்கள் ஒரே வீட்டில் இணைந்திருப்பதை குறிக்கிறது. பெரும்பாலும் இந்த யோகம் ‘கிரகண தோஷம்’ என்று அழைக்கப்படுகிறது. இது ஏன் தோஷமாக கருதப்படுகிறது என்பதை பற்றிப் பார்க்கலாம். சந்திரன் மனதின் காரகன். இவர் அன்பு, தாய்மை, மன அமைதி, உணர்ச்சிகள் ஆகியவற்றை குறிக்கிறார். ராகு மற்றும் கேது ஆகிய இருவரும் நிழல் கிரகங்கள். இவை இருளைக் குறிக்கும். சந்திரனுடன் ராகு அல்லது கேது இணையும் பொழுது சந்திரனின் ஒளி மறைக்கப்படுகிறது. நிஜ வாழ்க்கையில் சந்திர கிரகணம் எப்படி இருளை ஏற்படுத்துகிறதோ அதே போல் ஜாதகத்திலும் இந்த சேர்க்கை மனதின் தெளிவை குறைத்து குழப்பத்தை ஏற்படுத்தலாம்.
ராகு தற்போது கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்த நிலையில் சந்திரன் ஆகஸ்ட் 10 ஆம் தேதி கும்ப ராசிக்குள் நுழைகிறார். இதன் காரணமாக கும்ப ராசியில் கிரகண யோகம் உருவாக உள்ளது. இந்த யோகம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. முக்கியமாக சில ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் கவனமாக இருக்க வேண்டும். இந்த யோகமானது மன அமைதியை குறைக்கலாம். தேவையற்ற பயம், மனக்குழப்பம், மனச்சோர்வு, முடிவு எடுப்பதில் தடுமாற்றத்தை ஏற்படுத்தலாம். சந்திரன் தாயின் காரகன் என்பதால் தாயின் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம். தாய் வழி உறவுகளில் புரிதலின்மை அல்லது கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உணர்ச்சிகளை கையாள முடியாமல் உணர்ச்சிவசப்பட்டு தவறான முடிவுகளை எடுக்கலாம்.
தன்னம்பிக்கை குறைபாடு, தாழ்வு மனப்பான்மை போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம். எதிரிகளால் பிரச்சனைகள் ஏற்படலாம். ரகசியமாக எதிரிகள் உருவாகலாம். இந்த யோகமானது எந்த வீட்டில் அமைகிறது என்பதைப் பொறுத்து அதன் பலன்கள் மாறுபடும். இந்த யோகமானது குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது. கிரகண யோகத்தால் கவனமாக இருக்க வேண்டிய ராசிகளில் முதலிடம் பிடிப்பவர்கள் மீனம். சந்திரன் மற்றும் ராகு சேர்க்கையால் மீன ராசியின் 12 வது வீட்டில் கிரகண யோகம் உண்டாக இருக்கிறது. இதன் காரணமாக தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். அதிக மன அழுத்தம் ஏற்படலாம். வணிகர்கள் இந்த காலத்தில் புதிய ஒப்பந்தங்களை தவிர்த்து விட வேண்டும். புதிய ஒப்பந்தங்கள் தேவையற்ற இழப்புகளை ஏற்படுத்தலாம். எந்த ஒரு புதிய வேலையையும் தொடங்க வேண்டாம். பயணங்கள் மேற்கொள்வதையும் தவிர்க்க வேண்டும்.
ராகு மற்றும் சந்திரன் சேர்க்கையால் உருவாகும் கிரகணயோகம், துலாம் ராசியின் ஆறாவது வீட்டில் உருவாகிறது. துலாம் ராசிக்காரர்களுக்கு மறைமுகமான எதிரிகள் மூலம் தொந்தரவுகள் ஏற்படலாம். எடுத்த காரியங்கள் பாதியில் தடைபடலாம். சில முக்கியமான வேலைகள், முடியும் தருவாயில் உள்ள வேலைகள் நின்று போகலாம். உடல் நலத்தில் பிரச்சனைகள் ஏற்படலாம். தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படலாம். வாழ்க்கைத் துணையுடன் மோதல்களை சந்திக்க நேரிடலாம். அதேபோல் சிம்ம ராசிக்கும் எட்டாவது வீட்டில் கிரகண யோகம் உருவாவதால் இந்த காலக் கட்டத்தில் உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படலாம். குறிப்பாக சளி, காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம். அலுவலகத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். பணியில் சிறு அலட்சியம் கூட பெரும் விளைவுகளை ஏற்படுத்தலாம். வாகனம் ஓட்டும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். பண விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்கவும். கடன் கொடுப்பதை தவிர்த்து விடலாம்.
இந்த யோகம் ஏற்படுத்தும் விளைவுகள் தற்காலிகமானது தான். இருப்பினும் இதன் பாதிப்புகளை குறைப்பதற்கு சில பரிகாரங்கள் ஜோதிட ரீதியாக பரிந்துரைக்கப்படுகின்றன. மனதை அமைதி படுத்தவும், கவனத்தை சிதறாமல் இருக்கவும் தியானம் மற்றும் யோகா செய்ய வேண்டும். பௌர்ணமி நாட்களில் சந்திரனை வழிபடுவது சந்திர பகவானின் ஆற்றலை அதிகரிக்கும். மனதின் காரகனான சந்திரனின் அதி தேவதையான அம்மன் வழிபாடு மன தைரியத்தையும் பலத்தையும் கொடுக்கும். ராகு மற்றும் கேதுவால் ஏற்படும் இந்த அசுபப் பலன்களை தவிர்ப்பதற்கு ராகு கேதுவிற்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவது பலன்களைக் கொடுக்கும். கிரகண யோகம் என்பது ஜாதகத்தில் சவாலான அமைப்பே என்றாலும் தனிப்பட்ட முயற்சியும், மனோ பலம், சரியான வழிபாடுகள் போன்றவற்றால் இந்த எதிர்மறை விளைவுகளை குறைக்க முடியும்.
(பொறுப்பு துறப்பு: மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஜோதிடப் பலன்கள் பொதுவானவை. இது இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் ஜோதிடர்களின் கருத்துக்களின் அடிப்படையில் பெறப்பட்ட தகவல்களாகும். இதன் நம்பகத்தன்மைக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. தனிப்பட்ட ஜாதகங்களை பொறுத்தும், கிரகங்களின் நிலை, தசா புத்திகளை பொருத்தும் பலன்கள் வேறுபடும். எனவே உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அனுபவமிக்க ஜோதிடரை அணுகிய கலந்தாலோசிப்பது நல்லது)