
Aippasi Annabhisheka Purana Kathaigal Tamil : ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் வரும் பௌர்ணமி நாளன்று சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படும். அதாவது, அந்த நாளில் சிவபெருமான் அன்னத்தால் அலங்கரிக்கப்பட்ட கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருவார். அந்த கோலத்தை தரிசிக்கும் பக்தர்களுக்கு அவர்களது வாழ்நாளில் சாப்பாட்டிற்கே பஞ்சம் வராது என்பது ஐதீகம். ஏன் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது? அன்னாபிஷேகத்தின் மகிமை என்ன என்பது பற்றி முழுமையாக பார்க்கலாம் வாங்க…
மும்மூர்த்திகள் பிரம்மன், விஷ்ணு, சிவன். இதில் படைக்கும் தொழிலை செய்பவர் பிரம்மன். காக்கும் தொழிலை செய்பவர் விஷ்ணு பகவான். சிவபெருமான் அழிக்கும் தொழிலை செய்பவர். சிவபெருமானுக்கு 5 தலைகள் இருப்பது போன்று பிரம்ம தேவருக்கும் 5 தலைகள். சிவனைப் போன்று தனக்கு 5 தலைகள் இருப்பதை எண்ணி கர்வம் கொண்டார் பிரம்ம தேவர். ஆதலால் அவரது கர்வத்தை அடக்க எண்ணிய சிவபெருமான், பிரம்மனின் ஒரு தலையை கொய்தார். அப்படி அவர் எடுத்த பிரம்மனின் தலையானது சிவனின் கையை பற்றி கொண்டதோடு மட்டுமின்றி சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷமாகவும் மாறியது.
மேலும், சிவனின் கையிலிருந்த பிரம்மனின் தலையானது பிச்சையெடுக்கும் ஓடாக மாறியது. அதில் எவ்வளவு பிச்சையிட்டாலும் அந்த பிச்சை பாத்திரம் (ஓடு) நிறையவே நிறையாது அப்படி ஒரு சாபம். எப்போது அந்த பிச்சை பாத்திரம் சிவனின் கையைவிட்டு விலகுகிறதோ அப்போது தான் சிவனுக்கு பிடித்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். இதற்காக சிவன் பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. ஆதலால் வாழ்க்கையில் நாம் படும் கஷ்டமும் ஒன்றுமில்லை. அதைப் பற்றி கவலை கொள்ளாதீர்கள். காலம் மாறும் போது எல்லாமே சரியாகும் என்று காலம் வரும் வரை பொறுமையாக இருக்க வேண்டும்.
ஒருநாள் சிவபெருமான் காசிக்கு சென்று பிச்சை பாத்திரம் ஏந்தினார். அவருக்கு அன்னை அன்னபூரணி அன்னமிட்டாள். அன்னபூரணி அன்னமிட்டவாறு பின்னோக்கி நகரவே பிச்சை பாத்திரமும் சிவனின் கையைவிட்டு நகர்ந்து வந்தது. அதன் பிறகு அன்னபூரணி அன்னமிடுவதை நிறுத்தவே பிச்சை பாத்திரம் சிவபெருமானின் கையை நோக்கி நகர்ந்து வந்தது.
அப்போது சிவபெருமான் கையை மூடிக் கொள்ளவே பிச்சை பாத்திரம் கையில் நிற்க முடியாமல் கீழே விழுந்து உடைந்தது. இதனால் சிவனுக்கு பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷமும் நீங்கியது. அப்படி சிவனுக்கு அன்னபூரணி அன்னமிட்ட நாள் ஐப்பசி பௌர்ணமி. பிரம்மஹத்தி தோஷம் நீக்கப்பட்ட அந்த நாள் சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது.
ஐப்பசி மாதம் வரும் பௌர்ணமி நாள் சிவனுக்கு அன்னாபிஷேகத்திற்கு உகந்த நாள். அந்த நாள் இன்று நவம்பர் 15 வெள்ளிக்கிழமை. எல்லா சிவன் கோயில்களிலும் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. அதே போன்று காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றாலும் சிவபெருமானுக்கு அலங்காரம் செய்யப்படும். அதனைப் பார்க்க இரண்டு கண்கள் போதாது, கோடி கண்கள் தேவைப்படும். வாழ்நாள் இதைவிட வேறு எதுவும் தேவை இருக்காது என்று சொல்லும் அளவிற்கு சிவபெருமான் பக்தர்களுக்கு அன்னத்தால் தரிசனம் கொடுப்பார்.
அந்த தருணம் நம் உடல் நம்மை அறியாமல் சிலிர்க்கும். சிவபெருமானின் கீழ் பகுதி பிரம்ம பாகம், நடுப்பகுதி விஷ்ணு பாகம், மேற்பகுதி சிவ பாகம் ஆகிய பாகங்கள் முழுவதும் சிவனுக்கு அன்னம் சாற்றப்பட்டிருக்கும். மற்ற சிவன் கோயில்களைக் காட்டிலும் தஞ்சை பிரகதீஷ்வரர் கோயிலும், கங்கை கொண்ட சோழபுரம் ஆகிய உலக பிரசித்தி பெற்ற பிரம்மாண்ட்மான கோயில்களிலும் ஒருநாள் முழுவதும் சிவபெருமான் அன்னத்தால் பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பாராம். ஏனைய சிவன் கோயில்களில் ஐப்பசி பௌர்ணமி நாளான நவம்பர் 15ஆம் தேதி மாலை வேளையில் மட்டும் சிவன் அன்னத்தால் தரிசனம் கொடுப்பார்.
அன்னாபிஷேக பலன்கள்:
சிவனுக்கு சாற்றப்படும் அன்ன பிரசாதத்தை உண்டால் தீராத நோயும் தீரும் என்பது ஐதீகம். உங்களது வாழ்நாளில் சாப்பாட்டிற்கே பஞ்சம் வராது. குழந்தை பாக்கியம் கிடைக்க பெறுவீர்கள். பொதுவாக சோறு கண்ட இடம் சொர்க்கம் என்பார்கள். சிவனின் அன்னாபிஷேகத்தை பார்த்தாலோ அல்லது சிவன் கோயிலுக்கு அரிசி தானம் செய்தாலோ ஈரேழு தலைமுறைக்கும் சாப்பாட்டிற்கு கஷ்டம் இல்லாமல் வாழ்வார்கள் என்பது ஐதீகம்.