Aadi Month 2026: தமிழ் மாதங்களில் புனிதமானதாகக் கருதப்படும் ஆடி மாதம் 2026-ல் எப்போது தொடங்குகிறது, முதல் நாளில் அம்மனை வீட்டிற்கு அழைத்து வழிபடும் முறை மற்றும் உகந்த நேரங்கள் குறித்து ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி விளக்கியுள்ளார்.
தமிழ் மாதங்களில் மிகவும் தெய்வீகமான மாதமாகக் கருதப்படும் ஆடி, அம்மன் மற்றும் குலதெய்வ வழிபாடுகளுக்கு உகந்ததாகும். இந்த நிலையில், 2026-ம் ஆண்டு ஆடி மாதம் ஜூலை 17-ம் தேதி, வெள்ளிக்கிழமை பிறப்பதாக ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு ஆடி மாதத்தின் முதல் நாளே 'தலை வெள்ளி'யாக அமைவது கூடுதல் சிறப்பாகப் பார்க்கப்படுகிறது.
25
தேவர்களுக்கு மாலை நேரம்
தேவர்களுக்கு விடியற்காலையாக மார்கழி மாதமாக கருதப்படுவது போல, மாலை நேரமாக ஆடி மாதம் பார்க்கப்படுவதால், இந்த மாதமும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. முன்னோர்கள் வகுத்துத் தந்த இந்த வழிபாட்டு முறைகள், வாழ்க்கையில் எல்லா நலன்களையும் குறைவின்றி பெறுவதற்காகவே உருவாக்கப்பட்டன. அம்மனை வீட்டிற்கு அழைப்பது எப்படி? ஆடி மாதத்தின் முதல் நாளில், அம்மனை நம் இல்லத்திற்குள் எப்படி அழைக்க வேண்டும் என தேச மங்கையர்க்கரசி கூறும் விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
35
அம்மனை வீட்டிற்கு அழைப்பது எப்படி?
இதற்காக, எவர்சில்வர் பாத்திரம் அல்லாத ஒரு கலசத்தை எடுத்து, அதன் மீது மஞ்சள் பூசி நூல் சுற்ற வேண்டும். பின்னர், அதில் சுத்தமான நீர் மற்றும் வேப்பிலைகளை இட்டு, அதை நம் குலதெய்வமாகப் பாவித்து முதல் நாள் வழிபாட்டைத் தொடங்க வேண்டும். காலையில் இந்த கலசத்தின் முன்பு இரண்டு வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு வைத்து எளிமையாக வழிபடலாம். இந்த வழிபாட்டின் மூலம் குடும்பத்திற்கு ஆரோக்கியமும் வளமும் பெருகும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கை.
வீட்டில் கலசம் வைத்து வழிபடுபவர்கள், ஆடி முதல் நாள் அன்று அதிகாலை 4:30 மணி முதல் 5:30 மணிக்குள் வழிபடுவது மிகவும் சிறப்பு. அந்த நேரத்தில் முடியாதவர்கள், காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரையிலும், அதன்பிறகு காலை 9:00 மணி முதல் 10:20 மணி வரையிலும் வழிபாடு செய்யலாம். மதிய வேளையில் அம்மனுக்கு உணவு படைத்து வழிபாடு செய்பவர்கள், மதியம் 1:00 மணி முதல் 2:00 மணி வரையிலான நேரத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த நேரங்களில் வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும் என தேச மங்கையர்க்கரசி அறிவுறுத்தியுள்ளார்.
55
ஆடி வெள்ளிக்கான சிறப்பு வழிபாடுகள்
ஆடி வெள்ளிக்கிழமைகளில் ராகு காலமான காலை 10:30 மணி முதல் 12:00 மணிக்குள் துர்க்கை அம்மனை வழிபடுவது விசேஷமான பலன்களைத் தரும். அருகில் உள்ள கோயிலுக்குச் சென்றோ அல்லது வீட்டிலேயே கூட இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். வேறு எந்த வழிபாட்டையும் செய்ய இயலாதவர்கள், வீட்டில் ஒரு நெய் விளக்கை ஏற்றி வைத்து, அபிராமி அந்தாதியின் 100 பாடல்களையும் முழுமையாகப் பாராயணம் செய்யலாம். இவ்வாறு செய்வதன் மூலம் அன்னை அபிராமி அற்புதமான பலன்களை அள்ளித் தருவார் என்பது ஐதீகம்.