
தொழில்நுட்ப நிறுவனங்கள் துல்லியத்திற்கு பெயர்போனவை. ஆனால், சில சமயங்களில் சிறு தவறுகள் பெரும் சர்ச்சையை கிளப்பி விடுகின்றன. சமீபத்தில் ஒன்ப்ளஸ் நிறுவனம் வெளியிட்ட ஒன்ப்ளஸ் வாட்ச் 3-யில் "மேட் இன் சைனா" என்பதற்கு பதிலாக "மேடா இன் சைனா" என்று அச்சிடப்பட்டிருந்தது. இது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. "மேட்" என்பதற்கு பதிலாக "மேடா" என்று அச்சிடப்பட்டிருந்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் நகைச்சுவையான பதில்:
"ஊப்ஸ், நாங்க ஒரு மேடா மிஸ்டேக் பண்ணிட்டோம்!" என்று நகைச்சுவையுடன் ஒன்ப்ளஸ் நிறுவனம் இந்த தவறை ஒப்புக்கொண்டது. இந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டதோடு, "மேடா" பதிப்பை பெற்ற வாட்ச் 3 உரிமையாளர்களுக்கு இரண்டு வாய்ப்புகளை வழங்கியது. ஒன்று, இதை ஒரு "மிகவும் வரையறுக்கப்பட்ட பதிப்பாக" வைத்துக்கொள்ளலாம், ஏனெனில் இது தனித்துவமானது. அல்லது, எளிதாக மாற்றி புதிய வாட்ச் 3-ஐ பெற்றுக்கொள்ளலாம். "இது ஒரு தனித்துவமான லிமிடெட் எடிஷன்" என்று நிறுவனம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டது.
நெட்டிசன்கள் கொந்தளிப்பு:
இந்த செய்தி வைரலானதும், சமூக வலைதள பயனர்கள் பலவிதமான கருத்துக்களை தெரிவித்தனர். சிலர் இது நிறுவனத்தின் மார்க்கெட்டிங் தந்திரம் என்று கூறினர். மற்றவர்கள் ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் தரக்கட்டுப்பாட்டு குழு செய்த தவறு என்று விமர்சித்தனர்.
"இது ஒரு மார்க்கெட்டிங் தந்திரம். இது மூலமா ஒன்ப்ளஸ் வாட்ச் 3-க்கு இலவச விளம்பரம் கிடைக்குது." என்று ஒருவர் கூறினார்.
"தரக்கட்டுப்பாட்டு குழு என்ன பண்ணுது? இவ்வளவு பெரிய தவறு எப்படி நடக்கும்?" என்று மற்றொருவர் கேள்வி எழுப்பினார்.
"லிமிடெட் எடிஷனா? இதெல்லாம் ஒரு வியாபார யுக்தி." என்று சிலர் விமர்சித்தனர்.
"தவறு நடந்தா அதை ஏத்துக்கிட்டு சரி பண்றதுதான் பெரிய விஷயம். ஒன்ப்ளஸ் அதை செஞ்சிருக்கு." என சிலர் ஒன்ப்ளஸ் நிறுவனத்தை பாராட்டினர்.
இந்த சம்பவம் ஒன்ப்ளஸ் நிறுவனத்திற்கு ஒரு பாடமாக அமைந்தது. தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.
"மேடா இன் சைனா" என்ற பிழை ஒன்ப்ளஸ் வாட்ச் 3-க்கு இலவச விளம்பரத்தை கொடுத்தாலும், இது நிறுவனத்தின் தரக்கட்டுப்பாட்டில் உள்ள குறைபாடுகளை வெளிப்படுத்துகிறது. ஒன்ப்ளஸ் நிறுவனம் இந்த தவறை சரிசெய்து, எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.