FIFA World Cup 2026: கோலாகலமாகத் தொடங்கும் உலகக் கோப்பை! முதல் போட்டியில் மெக்சிகோ - தென்னாப்பிரிக்கா மோதல்

Ganesh A   | ANI
Published : Jun 11, 2026, 09:19 AM IST
FIFA World Cup 2026 Begins With Mexico vs South Africa Opener in Mexico City

சுருக்கம்

FIFA World Cup : கால்பந்து ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்பு முடிவுக்கு வந்திருக்கிறது. 2026 FIFA உலகக் கோப்பை இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. தொடரை நடத்தும் நாடுகளில் ஒன்றான மெக்சிகோ, முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

கால்பந்து ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்புக்கு இன்றுடன் முற்றுப்புள்ளி! 2026-ம் ஆண்டுக்கான FIFA உலகக் கோப்பை கால்பந்து திருவிழா, ஜூன் 11 (உள்ளூர் நேரப்படி) கோலாகலமாகத் தொடங்குகிறது. இந்திய நேரப்படி ஜூன் 12 அதிகாலை 12:30 மணிக்கு மெக்சிகோ சிட்டி ஸ்டேடியத்தில் நடக்கும் முதல் போட்டியில், தொடரை நடத்தும் நாடுகளில் ஒன்றான மெக்சிகோ, தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. வரலாற்றிலேயே மிகப் பெரிய உலகக் கோப்பையாக இது பார்க்கப்படுகிறது. கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்காவில் நடக்கும் இந்தத் தொடரில் மொத்தம் 48 அணிகள், 104 போட்டிகளில் விளையாடுகின்றன. குரூப் A-வில் நடக்கும் இந்த முதல் போட்டியில், சொந்த நாட்டு ரசிகர்கள் முன்னிலையில் வெற்றி பெற்று, தொடரை வெற்றியுடன் தொடங்க மெக்சிகோ அணி தீவிரமாக உள்ளது.

இதில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், 2010-ல் தென்னாப்பிரிக்காவில் நடந்த உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டத்தின் அப்படியே ஒரு ரிவர்ஸ் மேட்ச் இது. அப்போது, சிபிவே ஷபாலாவின் கோலால் தென்னாப்பிரிக்கா முன்னிலை பெற்றது. பின்னர், ரஃபேல் மார்குவேஸ் ஒரு கோல் அடித்து மெக்சிகோவுக்காக போட்டியை 1-1 என சமன் செய்தார். அன்று வீரராக இருந்த மார்குவேஸ், இன்று மெக்சிகோ அணியின் துணைப் பயிற்சியாளராக களத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சொந்த மைதானம், உள்ளூர் சூழல் போன்ற சாதகமான அம்சங்களால் மெக்சிகோ அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாகப் பார்க்கப்படுகிறது. இந்தச் சூழல், வீரர்களுக்கு மிகப்பெரிய உத்வேகத்தைக் கொடுக்கும் என மெக்சிகோ அணியின் மேனேஜர் ஜேவியர் அகுய்ரே நம்புகிறார். 

கோலாகலமாக தொடங்கும் கால்பந்து உலகக்கோப்பை

இதுகுறித்து FIFA-விடம் பேசிய அகுய்ரே, "எனது 50 வருட கால்பந்து வாழ்க்கையில், சொந்த மண்ணில் உலகக் கோப்பையில் விளையாடுவதை விட பெரிய மகிழ்ச்சியை நான் அனுபவித்ததில்லை. இது ஒரு மறக்க முடியாத தருணம். இதைத்தான் வீரர்களிடமும் சொல்லியிருக்கிறேன். அவர்களும் அதை உணர்ந்திருக்கிறார்கள். ஒரு குடும்பம் போல ஒன்றாக வளர்ந்திருக்கிறார்கள். இது அவர்களுக்கு மிகப்பெரிய பலத்தைக் கொடுக்கும்," என்றார்.
மறுபுறம், ஆப்பிரிக்க தகுதிச் சுற்றில் குரூப் C-யில் முதலிடம் பிடித்து தகுதி பெற்ற தென்னாப்பிரிக்கா, மெக்சிகோவுக்கு அதிர்ச்சி கொடுக்கத் தயாராக உள்ளது. அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹ்யூகோ ப்ரூஸ், "குரூப்பிலேயே மெக்சிகோதான் பலமான அணி. அதனால் நாளை எங்களுக்குக் கடினமான போட்டியாக இருக்கும். ஆனால், எனது அணி தயாராக இருக்கிறது. 90 நிமிடமும் ஒவ்வொரு பந்துக்காகவும் போராடுவோம். அதன் பிறகு என்ன நடக்கிறது என்று பார்ப்போம்," என்று கூறினார்.

அணியின் நடுகள வீரர் டெபோஹோ மொகோனா, பயிற்சியாளரின் நம்பிக்கையை எதிரொலித்தார். "நிச்சயமாக, எங்கள் மீது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. இது ஒரு அற்புதமான போட்டியாக, பிரம்மாண்டமான சூழலில் நடக்கும். ஒரு அணியாக, நாங்கள் இந்த ஆட்டத்தை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறோம். இது எங்கள் மக்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பது எங்களுக்குத் தெரியும்," என FIFA-விடம் தெரிவித்தார். தென்னாப்பிரிக்க அணிக்கு மேலும் ஒரு நல்ல செய்தியாக, காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த லெஃப்ட்-பேக் வீரர் ஆப்ரே மோடிபா, குணமடைந்து போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளார்.

மெக்சிகோ அணியின் உத்தேச வீரர்கள்:
ரேன்ஜெல்; கல்லார்டோ, வாஸ்குவேஸ், மான்டெஸ், ரெய்ஸ்; குட்டிரெஸ், லிரா, பிடால்கோ; குவினோன்ஸ், அல்வராடோ, ஜிமெனெஸ்
தென்னாப்பிரிக்கா அணியின் உத்தேச வீரர்கள்:
வில்லியம்ஸ்; முடாவ், ஓகோன், எம்போகாஸி, மோடிபா; மொகோனா, சிதோல், எம்பாதா; மோரேமி, ஃபாஸ்டர், அப்போலிஸ்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: மெஸ்ஸி, ரொனால்டோ உள்பட 2026 உலகக் கோப்பையில் புதிய சாதனை படைக்க உள்ள 8 வீரர்கள்
FIFA World Cup: சும்மா பணமழைதான்! கால்பந்து உலகக்கோப்பை வெல்லும் அணிக்கு எவ்வளவு கோடி தெரியுமா?