
ஃபிஃபா உலகக் கோப்பை 2026 தகுதிச்சுற்றில், கேப் வெர்டே அணி ஒரு வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளது. அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடந்த போட்டியில், சவுதி அரேபியாவுடன் 0-0 என டிரா செய்து, குரூப் H-ல் இருந்து நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது. இந்த குரூப்பில் ஸ்பெயின் அணி முதலிடத்தில் உள்ளது.
இந்த வெற்றியின் மூலம், உலகக்கோப்பை நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்ற மிகச்சிறிய நாடு என்ற பெருமையை கேப் வெர்டே பெற்றுள்ளது. 'ப்ளூ ஷார்க்ஸ்' என்று அழைக்கப்படும் இந்த தீவு நாட்டு அணி, உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற மூன்றாவது மிகச்சிறிய நாடு என்பது குறிப்பிடத்தக்கது. ஃபிஃபா இணையதள தகவலின்படி, இந்த அணி தாங்கள் விளையாடிய மூன்று போட்டிகளையுமே டிரா செய்து, இரண்டாம் இடத்தைப் பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
1998 உலகக் கோப்பையில் சிலி அணிக்குப் பிறகு, குரூப் ஸ்டேஜில் அனைத்து போட்டிகளையும் டிரா செய்து அடுத்த சுற்றுக்கு முன்னேறும் முதல் அணி கேப் வெர்டே தான். சவுதி அரேபியாவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடியதற்காக, கேப் வெர்டே வீரர் டெராய் டுவர்டே ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ப்ளூ ஷார்க்ஸ் அணி இதற்கு முன்பே, ஐரோப்பிய சாம்பியனான ஸ்பெயினுடன் மோதிய முதல் போட்டியை டிரா செய்திருந்தது. உருகுவே அணியுடன் நடந்த போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இப்போது சவுதி அரேபியாவுடனான டிராவின் மூலம், ஸ்பெயினுடன் சேர்ந்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. சவுதி அரேபியா அணி 2 புள்ளிகளுடன் குரூப்பில் கடைசி இடத்தைப் பிடித்தது.
போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையாகப் போராடின. தெளிவான கோல் வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. கேப் வெர்டே வீரர் ஜமீரோ மான்டீரோ, சவுத் அப்துல் ஹமீதை கடந்து சென்று அடித்த ஷாட்டை, சவுதி கோல்கீப்பர் முகமது அல்-ஓவைஸ் தடுத்தார்.
இரண்டாம் பாதியிலும் மான்டீரோ மீண்டும் ஒரு வாய்ப்பை உருவாக்கினார். ஆனால், அவர் அடித்த ஷாட்டில் வேகம் இல்லாததால், சவுதி கோல்கீப்பர் எளிதாகப் பிடித்தார். பின்னர், கெவின் பினா அடித்த ஒரு ஷாட், நூலிழையில் கோல் கம்பத்தை விட்டு விலகிச் சென்றது.
போட்டியின் இறுதி கட்டத்தில், நூனோ டா கோஸ்டா கொடுத்த பாஸை லாரோஸ் டுவர்டே கோலாக மாற்ற முயன்றார். ஆனால், கோல்கீப்பர் அல்-ஓவைஸ் அதை சிறப்பாகத் தடுத்தார். கேரி ரோட்ரிக்ஸ் கொடுத்த மற்றொரு வாய்ப்பை டா கோஸ்டா தவறவிட்டார்.
பல வாய்ப்புகளைத் தவறவிட்டாலும், கேப் வெர்டே அணி இந்தப் போட்டியை டிரா செய்து, ரவுண்ட் ஆஃப் 32 சுற்றுக்கு வரலாற்று சிறப்புமிக்க தகுதியைப் பெற்றது. பயிற்சியாளர் புபிஸ்டாவின் தலைமையில், இந்த அணி அடுத்ததாக ஜூலை 3 அன்று மியாமியில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினாவுடன் நாக்-அவுட் போட்டியில் மோத உள்ளது.