அருமனை அருகே புலியூர் சாலை பகுதியில் பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் பெண் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புலியூர் சாலை ஓடல் விளை குளவிளையை சேர்ந்த குருசுமுத்து மகள் செலினா (வயது 47). இவருக்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் கேரளா ஆனப்பாறை பகுதியை சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. திருமணமான சில தினங்களில் செலினா தனது தாயார் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் கணவர் வீட்டுக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தாய் தந்தையுடன் வசித்து வந்த செலினா விளவங்கோடு தாலுகா அலுவலகம் முன் பொதுமக்களுக்கு மனுக்கள் எழுதும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
மனுக்கள் எழுதி கிடைக்கும் வருமானத்தில் தன்னுடைய பிழைப்பை நடத்தி வந்ததாக தெரிகிறது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னால் தாய் தந்தை இறந்துள்ளார்கள். இதனால் செலீனா தனிமையில் வீட்டில் வசித்து வந்துள்ளார். செலீனா அக்கம்பக்கத்தினர் யாரிடமும் அதிகமாக பேசும் பழக்கம் இல்லை என கூறப்படுகிறது. கொரோனாவுக்கு பிறகு மனுக்கள் எழுதும் தொழிலை நிறுத்தியுள்ளார். இந்நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார்.
புதன்கிழமை மாலையில் இருந்து செலினாவின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. இதனை அப்பகுதி மக்கள் கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து துர்நாற்றம் அதிகமானதால் அக்கம் பக்கத்தினர் செலினாவின் வீட்டின் ஜன்னல் வழியாக எட்டி பார்த்துள்ளனர். அப்போது அழுகிய நிலையில் செலினா இறந்து கிடப்பதை கண்ட பொதுமக்கள் அருமனை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
உடனடியாக அருமனை காவல் துறையினர் விரைந்து சென்று செலிவினாவின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தற்கொலையா? கொலையா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.