நிலத்திற்காக கொலை செய்யப்பட்ட விவசாயி.. மது கொடுத்து கொன்ற சாராய வியாபாரி..அதிர்ச்சி வாக்குமூலம்..

By Raghupati RFirst Published Dec 7, 2021, 12:11 PM IST
Highlights

ஆத்தூர் அருகே விவசாயியை கொலை செய்தது ஏன் ? என்று சாராய வியாபாரி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். 

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அரியாகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் சுப்பு என்ற சுப்பிரமணி. இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு வயது  74. இவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஆத்தூர் அருகே உள்ள கல்பகனூர் ஊராட்சி சிவகங்கைபுரம் என்ற இடத்தில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டார். இது தொடர்பாக ஏற்கனவே ஆத்தூர் போலீசார், நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்த அறிவழகன், செல்லியம்பாளையம் கிராமத்தை சேர்ந்த ராமதாஸ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் பலரை ஆத்தூர் போலீசார் தேடி வந்தனர்.

இதனிடையே நரசிங்கபுரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த தினேஷ் ஆத்தூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தார். மேலும் ஓலைப்பாடி கிராமத்தை சேர்ந்த முஸ்தபாஆத்தூர் புறநகர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். இந்த நிலையில் விவசாயி கொலை தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வந்தனர். கொலை வழக்கில் முக்கிய கொலையாளியான கல்பகனூர் பகுதியை சேர்ந்த சாராய வியாபாரி பெருமாள், சக்திவேல் ஆகிய 2 பேரையும் நேற்று தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் இதுவரை 6 பேர் கைதாகி உள்ளனர்.

இ்ந்த நிலையில் கைதான பெருமாள் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். ‘கல்பகனூரில் விவசாயி சுப்பிரமணிக்கு சொந்தமான 7 ஏக்கர் விவசாய நிலம் இருந்தது. அந்த நிலத்தை ரூ. 1 கோடியே 27 லட்சத்துக்கு விலை பேசினேன். அதற்கு முன் பணமாக ரூ. 10 லட்சம் கொடுத்து பத்திரப்பதிவு செய்தோம். மீதி தொகையை குறிப்பிட்ட நாளில் கொடுத்து கிரையம் செய்யமுடியவில்லை. 

இதனால் அவரை கொலை செய்ய முடிவு செய்தேன். இதற்காக எனது நண்பர்கள் சக்திவேல், ராமதாஸ், தினேஷ்குமார், முஸ்தபா, அறிவழகன் ஆகியோர் உதவியை நாடினேன். இதைத்தொடர்ந்து கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சுப்பிரமணியை கல்பகனூருக்கு வரவழைத்து, மது வாங்கி கொடுத்தோம். பின்னர் அவரை அடித்து உதைத்து வெற்றுப்பத்திரத்தில் கையெழுத்து வாங்கினோம். பிறகு சுப்பிரமணியை கழுத்தை நெரித்து கொலை செய்து அங்குள்ள விவசாய நிலத்தில் புதைத்தோம்.

பின்னர் வெற்றுப்பத்திரத்தில் ரூ. 1 கோடியே 17 லட்சத்தை கொடுத்து விட்டதாக எழுதிக்கொண்டு, அரியாகவுண்டம்பட்டிக்கு சென்று சுப்பிரமணி கிரயம் செய்ய வராமல் இருக்கிறார் என்று தெரிவித்தோம். இதில் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி, அறிவழகன், ராமதாசை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சுப்பிரமணியை கொன்று புதைத்த இடத்தில் உடலை தேடினார்கள்.  இதையறிந்த நானும், சக்திவேலும் கடந்த 8 நாட்களுக்கு முன்பு இரவில் சுப்பிரமணி உடலை புதைத்த இடத்தில் இருந்து தோண்டி எடுத்தோம். அங்கு எலும்புக்கூடுகள் மட்டுமே இருந்தன. அதனை வசிஷ்ட நதியில் போட்டு விட்டோம். இதனால் தான் போலீசார் உடலை தோண்டிய போது கிடைக்கவில்லை. 

இதனிடையே விசாரணை நடத்தி போலீசார் எங்களை கைது செய்து விட்டனர்’ என்று பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து போலீசார் வசிஷ்ட நதி ஆற்றோரத்தில் தேடினர். அப்போது சுப்பிரமணியனின் கை, கால் எலும்புகள் மட்டும் கிடைத்தன. தலை, உடல் பாக எலும்புகள் கிடைக்கவில்லை. தொடர்ந்து அதனை போலீசார் தேடி வருகிறார்கள். மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் நாமக்கல் அருகே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

click me!