காதலி ஸ்வேதாவை துடிக்கதுடிக்க கொலை செய்தது ஏன்? கைதான காதலன் பகீர் வாக்குமூலம்..!

By vinoth kumarFirst Published Sep 24, 2021, 7:29 PM IST
Highlights

 இனி உனக்கும் எனக்கும் ஒத்து வராது. இருவரும் பிரேக் செய்து கொள்ளலாம்’ என்றாள். அதிலிருந்து தொடர்ந்து என்னை விட்டு விலகி செல்ல முயற்சி செய்து வந்ததோடு என்னிடம் செல்போனில் பேசுவதையும் தவிர்த்து வந்தாள். இதனால், எனக்கு கிடைக்காத ஸ்வேதா யாருக்கும் கிடைக்க கூடாது என்பதால் அவளை கொலை செய்தேன்.

தாம்பரத்தில் மாணவி ஸ்வேதா கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் ராமச்சந்திரனை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை, பாரதிபுரம், ரவி தெருவை சேர்ந்தவர் மதியழகன். மாநகர பேருந்து டிரைவர். இவருக்கு ஸ்வேதா (21) என்ற மகளும் ஒரு மகனும் உள்ளனர். ஸ்வேதா, சேலையூர் அகரம்தென் பிரதான சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு மைக்ரோபயாலஜி மற்றும் கிழக்கு தாம்பரத்தில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்துவ கல்லூரியில் ஒரு ஆண்டுக்கான லேப் டெக்னீசியன் டிப்ளமோ படித்து வந்தார்.

நேற்று மதியம் ஸ்வேதா, தன்னுடன் படிக்கும் தோழி சங்கீதாவுடன் ரயிலில் குரோம்பேட்டையில் இருந்து தாம்பரம் ரயில் நிலையம் வந்தார். பின்னர், கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். ரயில் நிலைய வளாகத்தில் உள்ள ரயில்வே குடியிருப்பு அருகே வந்தபோது, ஒரு வாலிபருடன் ஸ்வேதா பேசினார். வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வாலிபர் திடீரென, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஸ்வேதாவின் கழுத்தில் குத்தி கொலை செய்து, தானும் கழுத்தை அறுத்து கொண்டார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஸ்வேதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மயங்கிய நிலையில் இருந்த வாலிபரை அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது கழுத்தில் 9 தையல் போடப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

அப்போது, அவர் அளித்த வாக்குமூலத்தில்;-நான், கடந்த 2019ம் ஆண்டு சென்னையில் இருந்து மயிலாடுதுறைக்கு ரயிலில் செல்லும்போது ஸ்வேதா, அவரது தாயுடன் பயணம் செய்தார். அவரை பார்த்தவுடன் எனக்கு பிடித்தது. அவருக்கும் என்னை பிடித்திருந்தது. இருவரும் கண்ணசைவில் பேசி கொண்டோம். பின்னர் எங்களது செல்போன் எண்களை பறிமாறி கொண்டோம். மெசேஜ், வாட்ஸ்அப் என பேச தொடங்கினோம்.  நாளடைவில் காதலிக்க தொடங்கினோம். நான் பொறியியல் படிப்பை முடித்த பின்னர், கடந்தாண்டு மறைமலை நகர் பகுதியில் அறை எடுத்து தங்கி, அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். அடிக்கடி நேரில் சந்தித்து காதலை வளர்த்து வந்தோம். சினிமா தியேட்டர்கள், வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று தனிமையில் நேரத்தை கழித்துள்ளோம்.

இந்நிலையில், திடீரென ஸ்வேதா திடீரென பேசுவதை நிறுத்திக்கொண்டார். மேலும், அவரது செல்போனை எண்ணை தொடர்பு கொண்டால் பிஸியாகவே இருந்தது. இதனால், அவள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரது, செல்போனை பரிசோதனை செய்த போது  டேனியல் என்ற பெயர் வந்தது.  அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசியபோது, ஸ்வேதாவின் நண்பர் என கூறினார். ஸ்வேதாவிடம் கேட்டபோது, ‘என்னிடம் சண்டையிட்டு, ஏன் இவ்வளவு சீப்பாக நடந்து கொள்கிறாய். இனி உனக்கும் எனக்கும் ஒத்து வராது. இருவரும் பிரேக் செய்து கொள்ளலாம்’ என்றாள். அதிலிருந்து தொடர்ந்து என்னை விட்டு விலகி செல்ல முயற்சி செய்து வந்ததோடு என்னிடம் செல்போனில் பேசுவதையும் தவிர்த்து வந்தாள். இதனால், எனக்கு கிடைக்காத ஸ்வேதா யாருக்கும் கிடைக்க கூடாது என்பதால் அவளை கொலை செய்தேன் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து, இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராமச்சந்திரனை அக்டோபர் 8ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

click me!