கொடநாடு கொலை, கொள்ளையில் யார் மீது சந்தேகம்...? போலீசாரின் கேள்விக்கு சசிகலா பதில்...!

By Ajmal KhanFirst Published Apr 22, 2022, 12:04 PM IST
Highlights

கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக வழக்கு விசாரணை தீவிரம் அடைந்துள்ள நிலையில், இரண்டாவது நாளாக ஜெயலலிதா தோழியான சசிகலாவிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொடநாட்டில் கொலை, கொள்ளை

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும்  அவரது தோழி சசிகலா ஆகியோருக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் உள்ளது.  2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவிற்கு பிறகு  கொடநாடு எஸ்டேட்டில் 2017 ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ணா தாபா படுகாயம் அடைந்தார். மேலும் பங்களாவில் இருந்து முக்கிய ஆவணங்கள் மற்றும் சில பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் சேலத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்தார்.கொடநாடு எஸ்டேட்டில் கணினி ஆபரேட்டராக வேலை செய்து வந்த தினேஷ் தற்கொலை செய்து கொண்டார்.

200 நபர்களிடம் விசாரணை

இந்த மர்ம சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெற்ற நிலையில் கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ், திபு உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர்.  இந்த கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு நீலகிரி மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இந்த வழக்கில் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். 200க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஜெயலலிதா தோழியும் கொடநாடு எஸ்டேட் உரிமையாளருமான சசிகலாவிடம் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக  சசிகலாவிடம் நடைபெற்ற விசாரணையில்  100க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது சசிகலாவின் பதில்களை போலீசார் வீடியோ பதிவு  செய்து கொண்டனர். கோடநாடு பங்களா எப்போது துவங்கப்பட்டது. அந்த பங்களாவில் உள்ள அறைகள் எத்தனை, எத்தனை பணியாளர்கள் மற்றும் காவலாளிகள் பணியாற்றினார்கள்,மேலும் கொடநாட்டில் முக்கிய ஆவணங்கள் ஏதேனும் வைக்கப்பட்டதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தினர்.

யார் மீது சந்தேகம்

இதனையடுத்து இன்று இரண்டாவது நாளாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  அப்போது கொடநாடு பங்களாவின் சாவி வழக்கமாக யாரிடம் இருக்கும், கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்ற போது பங்களாவின் பொறுப்பு யாரிடம் இருந்தது என கேள்விகள் கேட்டனர். இதற்கு சசிகலா பதில் அளித்துள்ளார். மேலும் இந்த கொலை கொள்ளை சம்பவத்தில் யார் மேல் சந்தேகம் உள்ளது என்ற கேள்வியை போலீசார் கேட்டதாகவும் இதற்கு சசிகலா பதில் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய விசாரணை முடிவுக்கு பிறகு சசிகலா தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகள் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிப்பார் என கூறப்படுகிறது. 


 

click me!