அதிர்ச்சி.. ! கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து விஷவாயு தாக்கி 3 பேர் பலி.. மோட்டார் சரிசெய்த போது பரிதாபம்

By Thanalakshmi VFirst Published Apr 22, 2022, 11:15 AM IST
Highlights

மதுரையில் மின் மோட்டாரை பழுது பார்க்க கழிவுநீர் தொட்டியில் இறங்கிய 3 பேர் விஷவாயு தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
 

மதுரையில் மின் மோட்டாரை பழுது பார்க்க கழிவுநீர் தொட்டியில் இறங்கிய 3 பேர் விஷவாயு தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.மதுரையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட போது விஷவாயு தாக்கி 3 ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஒப்பந்த நிறுவனத்தை சேர்ந்த 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. VGR என்ற தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் விஜய் ஆனந்த், ஊழியர்கள் ரமேஷ், லோகநாதன் ஆகியோர் மீது எம்.எஸ் காலணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மதுரை பழங்காநத்தம் நேரு நகர் கந்தசாமி தெருவில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தொட்டியில் சேகரிக்கப்பட்டு, பின் மின்மோட்டார் மூலம் வேறு பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக கழிவுநீர் தொட்டியில் இருக்கும் மின் மோட்டார் இயங்கவில்லை கூறப்படுகிறது. இதனையடுத்து அப்பகுதிமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.

மாநகராட்சி சார்பில் VGR எனும் தனியார் ஒப்பந்த நிறுவனம் சார்பில் ஊழியர்கள் அனுப்பப்பட்டு, மோட்டாரை பழுதுபார்க்கும் பணியை கடந்த 2 நாட்களாக செய்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு சிவக்குமார் என்பவர் மின் மோட்டாரை பழுது பார்த்து கொண்டிருக்கும் போது, எதிர்பாராதவிதமாக கழிவுநீர் தொட்டிக்குள் தவறுதலாக விழுந்துள்ளார். மேலும் அவர் சத்தம் போடவே, அவரை காப்பாற்ற அங்கிருந்த சரவணன், லட்சுமணன்  ஆகியோர் கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கினர். சிவக்குமாரை காப்பாற்ற முயன்ற போது அவர்கள் 2 பேரும் தொட்டிக்குள் தவறி விழுந்தனர். 

இவர்களது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தியணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு அதிகாரி பாலமுருகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். 30 அடி ஆழமுள்ள கழிவுநீர் தொட்டில் இறங்கி தீயணைப்பு வீரர்கள், அவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், அவர்கள் 3 பேரும் விஷவாயு தாக்கி, இறந்துவிட்டனர்.இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த எஸ்.எஸ்.காலனி போலீசார் 3 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே நேரத்தில் கழிவு நீர் தொட்டியில் விழுந்து 3 பேர், விஷவாயு தாக்கி இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!