சரவணா ஸ்டோரில் என்ன நடக்கிறது..? பயத்தில் ஏன் லட்சலட்சமாய் அள்ளிக் கொடுக்க வேண்டும்..? கேள்விக்குறியாகும் நம்பகத்தன்மை..!

By Thiraviaraj RMFirst Published Nov 15, 2019, 1:00 PM IST
Highlights

தமிழகம் முழுவதும் சாம்ராஜ்ஜியம் நடத்தும் இந்தக் கடைக்கு அரசியல்வாதிகளுடன் தொடர்பு இருக்காதா? காவல்துறையினரின் நட்பு இருக்காதா? பிறகு ஏன் சாதாரண போலி பத்திரிக்கையாளரும், அடிமட்டத்தில் உள்ள கட்சிக்காரரும் வந்து மிரட்டியதும் பணத்தை அள்ளிக் கொடுக்க வேண்டும்..? 

சென்னை தி.நகர் சரவணா ஸ்டோர்ஸ் நகைக்கடை மேனேஜரை மிரட்டி ஒரு கோடி ரூபாய் கேட்ட அதிமுக உறுப்பினர் மற்றும் 5 வழக்கறிஞர் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவேற்காடு சுந்தரா சோழபுரம் ஏழுமலை நகர் முதல் தெரு வைச் சேர்ந்தவர் தனசேகரன். இவர் நேற்று  தி நகரில் உள்ள எலைட் சரவணா தங்க நகைக்கடையில் கடந்த 3ஆம் தேதி பழைய தங்க நாணயங்கள் கொடுத்து 3 சவரன் செயின் வாங்கிய உள்ளார். நகையை வாங்கிக் கொண்டு சென்ற தனசேகர் அடுத்த ஒரு மணி நேரத்தில் திரும்பி அதே கடைக்கு வந்துள்ளார். மேலும் அவர் கொண்டுவந்த அந்த நகையில் மேற்படி மாவு ஒரு பொருளை தடவியதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி தனசேகர் திருப்பிக் கொண்டு வந்த நகையை வியாபாரம் செய்த நிறுவனத்தின் ஊழியரிடம்  காண்பித்து தான் வாங்கிய 3 சவரன் செயின் போலியானது என்றும் இதற்கு இழப்பீடு வழங்கக்கோரியும் வாக்குவாதம் நடைபெற்றுள்ளது.  தனியார் பத்திரிகை நிறுவனத்தின் அதிகாரியாக இருக்கும் தனசேகர் இந்தப் போலியான நகை குறித்து நாங்கள் பிரஸ் மீடியாவில் இருக்கிறோம். உங்கள் கடையில் போலி நகைகளை விற்பதாக சொல்லி விளம்பரப்படுத்தி அசிங்கப்படுத்தி விடுவோம் என்று கூறி மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து தனசேகர் வெளியில் சொல்லாமல் இருக்க ஊழியர்களிடம் 15 லட்ச ரூபாய் கேட்டதாக கூறப்படுகிறது. ஊழியர்களும் தனசேகரின் மிரட்டலுக்கு அஞ்சி அவர் கேட்ட 15 லட்சம் ரூபாயை உடனடியாக அவருக்கு கொடுத்துள்ளனர். அதன் பின்பும் தனசேகர்  பதினைந்து நபர்களுடன் அந்த எலைட் சரவணா ஸ்டோர் நகை கடைக்கு சென்றதாகவும் அங்கு நீங்கள் போலியான தங்க நகைகளை விற்கிறீர்கள் என்று பலமுறை மிரட்டியுள்ளனர்.

அதேபோல் நேற்றும் தனசேகரன் தன்னுடன் 15 நபர்களை அழைத்துக்கொண்டு தி நகரில் அமைந்துள்ள சரவணா ஸ்டோர் நகை கடைக்கு சென்றுள்ளார். அங்கு சென்று இது குறித்து வெளியில் சொல்லாமல் இருக்க எங்களுக்கு மேலும் ஒரு கோடி ரூபாய் தரவேண்டும் எனவும் மிரட்டியதாக அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

பின்னர் இதுகுறித்து சரவணா ஸ்டோர் எலைட் தங்க நகை கடையின் சார்பில் போலீசில் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தனசேகர் உடனிருந்த வடபழனி பகுதியைச் சேர்ந்த  அதிமுக உறுப்பினர் ஜீவா மற்றும் ஜெகதீசன், அமானுல்லா, ஸ்ரீராம், முருகன், திருமலை ஆகிய 5 வழக்கறிஞர்கள் உட்பட தனியார் கணக்கு பதிவாளர் சையத் அபுதகர் மற்றும் டிரைவர் தண்டபாணி ஆகிய  9 பேரை தி நகர் போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் தனசேகர் தரப்பிலிருந்து நபர்கள் சரவணா ஸ்டோர் நகை கடை போக்கை கண்டித்து நாங்கள் புகார் கொடுக்க வந்ததாகவும் ஆனால் அந்த புகாரை காவல்துறையினர் ஏற்க மறுத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.  எலைட் சரவணா ஸ்டோர் நகைக்கடை இடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு தற்போது காவல்துறையினர் இத்தகைய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

பிடிபட்ட தனசேகர் இடமிருந்து போலியான காவல்துறை அடையாள அட்டையும் 4 ஊடகம் சார்ந்த அடையாள அட்டையும் மேலும் சில ஆவணங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். தனசேகர் உடன் வந்த அதிமுக உறுப்பினர் ஜீவா, கொண்டுவந்த ஏர்கன் துப்பாக்கி உட்பட அவர்கள் பயன்படுத்திய இரண்டு கார்களையும் பறிமுதல் செய்தனர்.

சரவணா ஸ்டோர் எலைட் நகைக்கடை தவறு செய்யவில்லை என்றால் எதற்காக 15 லட்சம் ரூபாயை தூக்கிக் கொடுத்தது என்கிற சந்தேகமும் இந்த சம்பவத்தில் எழுந்துள்ளது. அவர்கள் வந்து முதல்முறையாக மிரட்டும்போதே காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கலாமே. உண்மையான பத்திரிக்கையாளர்கள் வந்தாலும், நேர்மையாக இருந்தால் ஏன் பயப்பட வேண்டும்? மிரட்டலுக்கு பயந்து லட்சலட்சமாக தூக்கிக் கொடுக்க சரவணா ஸ்டோர் என்ன பின்புலம் இல்லாத சாதாரணமானவர்களால் நடத்தப்படுகிறதா..? 

தமிழகம் முழுவதும் சாம்ராஜ்ஜியம் நடத்தும் இந்தக் கடைக்கு அரசியல்வாதிகளுடன் தொடர்பு இருக்காதா? காவல்துறையினரின் நட்பு இருக்காதா? பிறகு ஏன் சாதாரண போலி பத்திரிக்கையாளரும், அடிமட்டத்தில் உள்ள கட்சிக்காரரும் வந்து மிரட்டியதும் பணத்தை அள்ளிக் கொடுக்க வேண்டும்..? என சரவணா ஸ்டோர்ஸ் நகைக்கடையின் மீதான நம்பிக்கையின் மீது பலத்த சந்தேகம் எழுகிறது.

click me!