
தலைக்கவசம் அணியாமல் வந்த இளைஞரின் வாகனத்தை தடுத்து நிறுத்தி வீடியோ எடுத்த காவலரின் செல்போனை பறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை தல்லாகுளத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
தலைக்கவசம் அணியாதவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை தல்லாகுளம் காவல் நிலையம் அருகே உள்ள பிரதான சாலையில் ஆல்வின் ஜெபஸ்டின், சின்ன கருத்தப்பாண்டி ஆகிய இரண்டு காவலர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று மாலை அந்த வழியாக தலைக்கவசம் அணியாமல் வந்த இளைஞரின் வாபனத்தை போலீசார் வழிமறித்தனர். அப்போது அந்த வாகனத்தில் இருந்து இறங்கிய இளைஞர் வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டி உள்ள எனது வாகனத்தை நீங்கள் எப்படி மறிக்கலாம் எனக்கூறி போலீஸ்காரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதை காவலர்கள் வீடியோ எடுத்துக் கொண்டு இருந்த நிலையில் உடனே அந்த இளைஞர் போலீசாரின் கையில் இருந்த செல்போனை பறித்தார். பின்னர் அதைத் திருப்பித் தரமாட்டேன் என அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்தது.இதையடுத்து அந்த இளைஞரை விரட்டி பிடித்த மற்றொரு காவலர் சின்ன கருத்தப்பாண்டி, அந்த இளைஞரிடமிருந்து செல்போனை திரும்பப் பெற்றார். பின்னர் அவர்கள் அந்த இளைஞர் மீது தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதனடிப்படையில் காவல்துறையிடம் செல்போன் பறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட மதுரை யானைக்கால் பகுதியை சேர்ந்த வசந்த் என்ற அந்த இளைஞர் மீது தல்லாகுளம் போலீசார், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் அத்துமீறி உடமையை பறித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பதிவு செய்து கைது செய்தனர். காவலரிடம் செல்போன் பறித்து பொது அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமுதாயத்தில் வைரலாகி வருகிறது.