ரவுடிகள் அஞ்சி நடுங்கும் சூப்பர் எஸ்.பி. !! ஓட ஓட விரட்டி அரெஸ்ட் பண்ணிய போலீசார் !!

By Selvanayagam PFirst Published Jun 24, 2019, 8:15 AM IST
Highlights

வேலூர் மாவட்டத்தில்  பொது மக்களை அச்சுறுத்தி வந்த  ரவுடிகளை மாவட்ட எஸ்.பி. பிரவேஷ்குமார் உத்தரவின்படி போலீசார் விரட்டி விரட்டி கைது செய்துள்ளனர். இதுவரை 369 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 35 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில்  கடந்த சில மாதங்களாக கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், செயின் பறிப்பு போன்ற குற்றங்கள் அதிகரித்து வந்தது. பொது மக்களும் இரவு நேரங்களில் பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்ற ஆள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் கூட நடமாட முடியாமல் திணறி வந்தனர்.

எங்கு பார்த்தாலும் வழிப்பறி, செயின்பறிப்பு, கொள்ளை, திருட்டு, அடிதடி என ரவுடிகள் அட்டகாதம் பெருகி வந்தது. ரவுடிகளின்  இந்த அட்டகாசத்தால் பொதுமக்கள் மிரண்டுபோயிருந்தனர்.

வேலூரில் பிரபல ரவுடிகளான சத்துவாச்சாரியைச் சேர்ந்த வசூர் ராஜா, வீச்சு தினேஷ், காட்பாடியைச் சேர்ந்த ஜானி ஆகியோர் தலைமையிலான ரவுடிக் கும்பல்கள் பயங்கரமான ஆயுதங்களுடன் பொது இடங்களில் அடிக்கடி மோதிக்கொண்டனர். இதனால் பொது மக்கள் அச்சத்துடன் நடமாடி வந்தனர்.


இதையடுத்து களத்தில் இறங்கிய வேலூர் மாவட்ட எஸ்.பி.  பிரவேஷ்குமார்  பொது மக்களை அச்சுறுத்தி வரும் ரவுடிகளின் பட்டியலை தயாரித்த போலீசார், அவர்களை ஓட ஓட விரட்டி கைது செய்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களில் மட்டும் 369 ரவுடிகளை போலீஸார் அதிரடியாகக் கைதுசெய்திருக்கிறார்கள். இவர்களில் 35 ரவுடிகள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போலீஸாரின் அதிரடியான நடவடிக்கையால் வேலூர் மாவட்டத்தில் ரவுடியிசம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 

இனிவரும் காலங்களில் ரவுடியிசத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பிணையில் வெளிவரமுடியாத வகையில் குண்டர் சட்டத்தில் காவல் நீட்டிக்கப்படும்'' என்று எஸ்.பி பிரவேஷ்குமார் கடுமையாக எச்சரித்திருக்கிறார்.

click me!