உத்தரகாண்டு ரிசார்ட்டில் பணியாற்றிய 19 வயது இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அம்மாநில பாஜக மூத்த தலைவர் வினோத் ஆர்யாவின் மகனும் ரிசார்ட் உரிமையாளருமான புல்கித் ஆர்யா உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்டு ரிசார்ட்டில் பணியாற்றிய 19 வயது இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அம்மாநில பாஜக மூத்த தலைவர் வினோத் ஆர்யாவின் மகனும் ரிசார்ட் உரிமையாளருமான புல்கித் ஆர்யா உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்ட் மாநில பாஜக மூத்த தலைவர் வினோத் ஆர்யா. இவர் அம்மாநில அமைச்சராக இருந்துள்ளார். வினோத் ஆர்யாவின் மகன் புல்கிட் ஆர்யா. அம்மாநிலத்தின் ரிஷிகேஷ் அருகே வனந்த்ரா என்ற பெயரில் ரிசார்ட் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த ரிசார்ட்டில் அங்கிதா பண்டாரி என்ற 19 வயது பெண் வரவேற்பாளராக வேலை செய்து வந்துள்ளார்.
இதனிடையே, ரிசார்ட்டில் பணியாற்றி வந்த அங்கிதா கடந்த 18-ம் தேதி பணி முடிந்து வீடு திரும்பவில்லை. இதனால், பதறிப்போன பெற்றோர் பல்வேறு இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து, தந்தை காவல் நிலையத்தில் புல்கித் ஆர்யா மீது புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பின்னர், அங்கிதா பண்டாரியின் காணாமல் போனதற்கு புல்கித் ஆர்யா தான் காரணம் என்று கூறி பெற்றோர் சமூக வலைத்தளங்களில் கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலானதால் புல்கித் ஆர்யாவுக்கு எதிராக அழுத்தம் காரணமாக விசாரணை நடைபெற்றது. இந்த சம்பவம் தொடர்பாக புல்கித் ஆர்யா உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தியதில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். சம்பவத்தன்று சீலா என்ற கால்வாய் அருகே அங்கிதாவுக்கும், புல்கித் ஆர்யாவுக்கு வாக்குவாதம் ஏற்பட்டு ஆத்திரத்தில் கால்வாயில் தள்ளி கொலை செய்ததாக தெரிவித்தார். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அங்கிதா பண்டாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பாஜக தலைவர் வினோத் ஆர்யாவின் மகன் புல்கிட் ஆர்யாவுக்கு சொந்தமான 'வனந்த்ரா' ரிசார்ட்டை சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது என கூறி இடிக்கப்பட்டது.