மாவட்ட அதிகாரிகளை மிரட்ட மாணவிகளை பள்ளியில் வைத்து பூட்டிய ஆசிரியர்கள்... உ.பி.யில் பரபரப்பு..!

By Kevin KaarkiFirst Published Apr 23, 2022, 10:56 AM IST
Highlights

மாவட்ட அதிகாரிகள் பிறப்பித்த பணி இட மாற்ற நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி இரண்டு ஆசிரியர்கள் இவ்வறு செய்ததாக தெரிய வந்துள்ளது. 

இரண்டு ஆசிரியர்களுக்கு மாவட்ட நிர்வாகம் பணி  இட மாற்றம் செய்து உத்தரவிட்டதை அடுத்து, கோபமுற்ற ஆசிரியர்கள் மாணவிகளை பள்ளியில் வைத்து பூட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்திர பிரதேச மாநிலத்தின் லக்கிம்பூர் மாவட்டத்தில் உள்ள கஸ்துர்பா காந்தி பலிகா வித்யாலயா பள்ளியின் மொட்டை மாடியில் இரண்டு ஆசிரியர்கள்  சேர்ந்து கொண்டு 24 மாணவர்களை நிற்க வைத்து கவை பூட்டிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது. மாவட்ட அதிகாரிகள் பிறப்பித்த பணி இட மாற்ற நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி இரண்டு ஆசிரியர்கள் இவ்வறு செய்ததாக தெரிய வந்துள்ளது. 

மாணவிகளுக்கு தண்டனை:

கடந்த வாரம் வியாழன் கிழமை இரவு இந்த சம்பவம் நடைபெற்று இருக்கிறது. மாணவிகள் பள்ளியில் இருந்து விடுதிக்கு திரும்பாத சம்பவம் பற்றி விடுதி காப்பாளர் ரேனு ஸ்ரீவட்சவ், மாவட்ட கல்வி அலுவலர் பாண்டேவுக்கு தகவல் தெரிவித்தார். இதை அடுத்து இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்படி பள்ளிக்கு விரைந்த போலீசார், பல மணி நேரங்களுக்கு பின் மாணவிகளை மீட்டு, அவர்கள் வசித்து வந்த தங்கும் விடுதிக்கு மீண்டும் அழைத்து வந்தனர். 

"மாவட்ட அதிகாரிகள் பணி இட மாற்றம் செய்யும் நடவடிக்கையை ரத்து செய்ய அழுத்தம் கொடுக்கும் வகையில் ஆசிரியர்கள் இவ்வாறு செய்தனர்," என லக்கிம்பூர் மாவட்டத்தின் ஆரம்ப கல்வி அலுவலர் லக்‌ஷ்மி காந்த் பாண்டே தெரிவித்தார். இத்துடன் பெண் போலீஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, அதன் பின் இந்த பிரச்சினை சரி செய்யப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.

விசாரணை:

பள்ளி மாணவிகளை மொட்டை மாடியில் நிற்க வைத்த இரண்டு ஆசிரியர்களான மனோரமா மிஸ்ரா மற்றும் கோல்டி கட்டியர் மீது சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது என ரேனு ஸ்ரீவட்சவ், தெரிவித்தார்.  மேலும் , "இந்த விவகாரம் தொடர்பாக துறை ரீதியிலான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு இருக்கிறது. மூன்று நாட்களுக்கு விசாரணை அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது," என பாண்டே தெரிவித்தார். 

விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், இருவரும் பணி நீக்கம் செய்யப்படுவதோடு நிச்சயம் மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பாண்டோ மேலும் தெரிவித்தார். 

click me!