கர்நாடகாவில் ஐபோன் மோகத்தால் டெலிவரி பாயைக் கொன்று தீவைத்து எரித்த 20 வயது இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள அரசிகெரே நகரைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஹேமந்த் தத்தா. இவர் பிளிப்கார்ட் இணையதளத்தில் இருந்து ஐபோன் ஆர்டர் செய்திருக்கிறார். கேஷ் ஆன் டெலிவரி முறையில் ஆர்டர் செய்திருந்ததால் டெலிவரியின்போது ரூ.46,000 க்கு கொடுக்கவேண்டி இருந்தது.
பிப்ரவரி 7ஆம் தேதி ஹேமந்த் நாயக் என்பவரை ஐபோனை டெலிவரி செய்ய தத்தாவின் வீட்டுக்கு வந்துள்ளார். ஆனால் அப்போது தத்தாவிடம் போனை வாங்குவதற்குத் தேவையான பணம் கையில் இல்லை. இருந்தாலும் எப்படியாவது ஐபோன் தனக்கு வேண்டும் என்று நினைத்த தத்தா நாயக்கை கத்தியால் குத்திக் கொன்றதாகக் கூறப்படுகிறது.
கொன்ற நாயக்கின் உடலை தத்தா அடுத்த நான்கு நாட்களுக்கு தன் வீட்டிற்குள்ளேயே வைத்திருந்ததாகவும் பிப்ரவரி 11ஆம் தேதி ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் அருகே உள்ள ரயில்வே பாலத்துக்கு நாயக்கின் உடலைக் கொண்டுசென்று மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துவிட்டதாவும் காவல்துறையினர் கூறுகின்றனர்.
நாயக் காணாமல் போனது குறித்து பிப்ரவரி 8ஆம் தேதி அவரது சகோதரர் மஞ்சுநாத் நாயக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில், பிப்ரவரி 16ஆம் தேதி ரயில்வே பாலத்தில் ஒரு சடலம் கருகி நிலையில் கிடப்பதாக நண்பர் ஒருவர் மீது மஞ்சுநாத்துக்குத் தெரியவந்தது. அது தனது சகோதரனுடையதாக இருக்கலாம் எனச் சந்தேகித்த மஞ்சுநாத் மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
கடைசியாக பிப்ரவரி 7ஆம் தேதி காலை தனது சகோதரர் நாயக் தன்னை போனில் அழைத்தார் என்று மஞ்சுநாத் தனது புகாரில் குறிப்பிட்டார். அதே நாளில் மதியம் 1.42 மணி அளவில் நாயக்கின் மொபைல் போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, நாயக்கின் சக ஊழியர் ஒருவரும் தனக்குப் போன் செய்தார் என்று மஞ்சுநாத் சொல்லி இருக்கிறார்.
இதனால், நாயக் மாயமான வழக்கை கொலை வழக்காக மாற்றிய காவல்துறை நாயக்கின் மொபைல் போன் கடைசியாக எந்த இடத்தில் ஆன் செய்யப்பட்டு இருந்தது என்பதை ஆராய்ந்தனர். கடைசியாக தத்தாவின் வீட்டில்தான் நாயக்கின் மொபைல் போன் செயல்பாட்டில் இருந்திருக்கிறது எனக் கண்டுபிடித்துவிட்டனர். தத்தாவின் வீட்டில் சோதனை நடத்தியபோது நாயக்கின் மொபைல் போன் மற்றும் பிற பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதனால் சனிக்கிழமை தத்தா கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை விசாரணையில் தத்தாவும் இ-காமர்ஸ் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துவிட்டு, வேலையை விட்டவர் என்றும் கேஷ் ஆன் டெலிவரி முறையில் ஐபோன் ஆர்டர் செய்துவிட்டு, டெலிவரிக்கு முன் பணத்தை ஏற்பாடு செய்யத் முடியாமல் போனதால் போனைக் கொண்டுவந்த டெலிவிரி பாயைக் கொன்றதாவும் தெரியவந்தது. நாயக்கைக் கொன்ற தத்தா ஐபோனுடன் நாயக்கின் மொபைல் போன் மற்றும் அவர் பிறருக்கு டெலிவரி செய்ய வைத்திருந்த பொருட்களையும் எடுத்து வைத்துக்கொண்டிருக்கிறார்.
கொல்லப்பட்ட ஹேமந்த் நாயக் கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேலை தேடி பெங்களூரு சென்றவர். பெங்களூருவில் சிறிது காலம் பணிபுரிந்துவிட்டு, அரசிகெரேவுக்குத் திரும்பி வந்து, கடந்த எட்டு மாதங்களாக ஈகார்ட் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் டெலிவரி ஏஜென்டாகப் பணிபுரிந்தார்.