
அமெரிக்காவின் இலினோஸ் பகுதியில் ஏற்பட்ட கார் விபத்தில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். தெலுங்கானா மாநிலத்தின் கம்மம் பகுதியை சேர்ந்த பவன் ஸ்வர்னா மற்றும் மலகாஜிரி மாவட்டத்தை சேர்ந்த வம்சி கிருஷ்ணா பச்செட்டி ஆகியோர் இரு கார்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஏப்ரல் 21 தேதி அதிகாலை 4.30 மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளது. விபத்தை ஏற்படுத்திய மற்றொரு காரை 32 வயதான மேரி மியுனியர் என்ற பெண் ஓட்டி வந்துள்ளார். அதிவேகமாக வந்த மேரி மியுனியர் செண்டர் கோடை கடந்து வந்து பவன் வாகனத்தின் மீது மோதினார். இதில் பவன் மற்றும் வம்சி மற்றும் மேரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பவன் மற்றும் வம்சியுடன் அதே காரில் பயணம் செய்த கல்யான் டொர்னா, கார்திக் கக்குமானு மற்றும் யஷ்வந்த் உத்தலபதி காயங்களுடன் உயிர் தப்பி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
"அமெரிக்காவில் உள்ள கார்போண்டேல் பகுதியில் அமைந்து இருக்கும் தெற்கு இலினியோஸ் பல்கலைக்கழகத்தில் வம்சி மற்றும் பவன் கணினியியல் பிரிவில் முதுகலை பட்டம் பயின்று வந்தனர். விபத்து ஏற்பட்ட போது வம்சி ஓட்டுனர் இருக்கையின் பின்புறமாக அமர்ந்து இருக்கிறார். எதிரே, அதிகவேகமாக வந்த கார் நேருக்கு நேராக பவன் கார் மீது மோதியது," என வம்சியின் சகோதரர் சஷி கிரன் பச்செட்டி தெரிவித்தார்.
ஆழ்ந்த இரங்கல்:
"விபத்தில் இருவர் உயிரை பறித்துக் கொண்டு மூன்று பேருக்கு காயங்கள் ஏற்பட்டு இருக்கும் செய்தி அறிந்து மனம் நொறுங்கி விட்டது. வம்சி மற்றும் பவன் குடும்பத்தாருக்கு எங்களின் ஆழந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறோம். காயமுற்ற சிவில் மாணவரான கல்யான், கணினியியல் பிரிவு மாணவர்களான கார்திக் மற்றும் யஷ்வந்த் விரைந்து குணம் பெறுவர் என நம்புகிறோம்," என்று தெற்கு இலினியோஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஆஸ்டின் லேன் தெரிவித்தார்.
"இந்த கடினமான சூழலில் அவர்களின் குடும்பத்தாருக்கு ஆதரவாக இருக்க தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கு உதவ எங்களின் கவுன்சலிங் மற்றும் மனநல சேவைகள் பிரிவு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். எங்களின் எண்ணம் மற்றும் நினைப்பு முழுக்க இந்த மாணவர்கள் மற்றும் அவர்களை விரும்புவோரை பற்றியே இருந்து வருகிறது." என அவர் மேலும் தெரிவித்தார்.
நிதி உதவி:
உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தாருக்கு உதவ, ரகு ரெட்டி பெசரு என்பவர் GoFundMe பக்கத்தில் நிதி உதவி கோரியிருந்தார். 50 ஆயிரம் டாலர்கள் உதவி கோரி இருந்த நிலையில் இதுவரை 14 ஆயிரத்து 500 டாலர்கள் வரை நிதி சேர்ந்துள்ளது.