
பெண் உதவி ஆய்வாளருக்கு கத்தி குத்து
நெல்லை மாவட்டம் சுத்தமல்லியை அடுத்த பழவூர் கிராமத்தில் கோயில் கொடை விழா நடைபெற்றது. இந்த கோயில் திருவிழாவில் பாதுகாப்பு பணியில் உதவி காவல் ஆய்வாளர் மார்கரெட் தெரசா உள்ளிட்ட காவலர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, பக்தர்களை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டதை காவல் துறையினர் அகற்ற முயன்ற போது ஆறுமுகம் என்பவர் பெண் காவல் உதவி ஆய்வாளர் மார்கரெட் தெரசாவை கத்தியால் கழுத்தில் குத்தியுள்ளார். இந்த கத்தி குத்து சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மார்கரெட் தெரசாவை மீட்ட போலீசார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அதிமுக கண்டனம்
இந்த சம்பவத்திற்கு அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. இந்தநிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவல் உதவி ஆய்வாளரை தொடர்பு கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,ஆறுதல் கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி காவல் நிலையத்தில் பெண் காவல் உதவி ஆய்வாளராகப் பணிபுரியும் செல்வி மார்க்ரெட் தெரசா என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, ஆறுமுகம் என்ற நபர் உதவி ஆய்வாளரைக் கத்தியால் வெட்டியதையடுத்து, அவர் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைத் தாக்கிய ஆறுமுகம் என்ற நபர், காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.5 லட்சம் உதவி
பெண் காவல் உதவி ஆய்வாளர் தாக்கப்பட்ட செய்தியை அறிந்த, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இச்சம்பவத்தில் காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வரும் செல்வி. மார்க்ரெட் தெரசா அவர்களைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல், செல்வி மார்க்ரெட் தெரசா அவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளதோடு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக ஐந்து இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிடவும் ஆணையிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.