#BREAKING எஸ்.ஐ கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் அதிர்ச்சி செய்தி.. 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது.!

By vinoth kumarFirst Published Nov 22, 2021, 8:07 AM IST
Highlights

பூமிநாதனின் பின் தலையில் வெட்டிய கத்தி கறி வெட்டும் அரிவாள் என்பது தெரியவந்தது. கறி கடை வைத்திருப்பர்கள் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. அதிகாலை கொலை நடந்த இடத்தில் செயல்பட்ட செல்போன்கள் மூலம் விசாரணையை தொடங்கினர்.  

திருடர்களை விரட்டிச் சென்ற நவல்பட்டு சிறப்பு எஸ்.ஐ. பூமிநாதன் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய 2 சிறுவர்கள் உள்பட 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் பள்ளத்துப்பட்டியில் நவல்பட்டு காவல் நிலையத்தில் பணியாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, அதிகாலை 1.30 மணியளவில் பூலாங்குடி காலனி பகுதியில் இரண்டு இருசக்கர வாகனத்தில் 4 பேர் வந்துள்ளனர். இதில் ஒரு இருசக்கர வாகனத்தில், ஒரு ஆடு இருந்துள்ளது. இதனை பார்த்த எஸ்.ஐ.  பூமிநாதன், அவர்கள் நின்ற பகுதிக்கு சென்றபோது மர்ம நபர்கள் ஆட்டை அங்கேயே விட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பினர். ஆடு திருடர்களை பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பூமிநாதனும், சித்திரைவேலுவும் விரட்டி சென்றனர். அப்போது பூலாங்குடி காலனியில் இருந்து (திருவெறும்பூர்- கீரனூர் சாலையில்) 15 கிமீ தூரம் துரத்தி வந்த போது அவர்கள் பள்ளத்துப்பட்டி ஊருக்குள் சென்றனர். எஸ்ஐ பூமிநாதனும் தொடர்ந்து விரட்டிச்சென்றார்.

பள்ளத்துப்பட்டியில் இருந்து புதுக்கோட்டை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வரும் வழியில், ரயில்வே தரைப்பாலத்தில் மழைநீர் தேங்கி இருந்ததால் ஆடு திருடர்கள் அங்கேயே நின்றுவிட்டனர். எஸ்ஐ பூமிநாதன் அவர்களை மடக்கி நிறுத்திவிட்டு, வழி தவறி சென்ற ஏட்டு சித்திரைவேலுக்கு செல்போனில் தெரிவித்துள்ளார். அவர் வர தாமதமானதால், நவல்பட்டு காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரியும் குளத்தூர் சேகரை தொடர்பு கொண்டு அழைத்துள்ளார்.இதற்கிடையில் அந்த கும்பல், திடீரென அரிவாளால் பூமிநாதனின் தலையில் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் தலையில் பலத்த காயத்துடன் பூமிநாதன் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதையடுத்து 4 பேரும் அங்கிருந்து தப்பிவிட்டனர். இதனையத்து,  பூமிநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்நிலையில், குற்றவாளிகளை பிடிக்க 8 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடப்பட்டு வந்தனர். கொலை செய்வதற்கு முன்பாக ஏட்டு சேகரிடம் பேசிய  பூமிநாதன் தேனீர்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிவித்திருந்தார். மேலும், பூமிநாதனின் பின் தலையில் வெட்டும் போது அந்த கறி வெட்டும் அரிவாள் என்பது தெரியவந்தது. கறி கடை வைத்திருப்பர்கள் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. அதிகாலை கொலை நடந்த இடத்தில் செயல்பட்ட செல்போன்கள் மூலம் விசாரணையை தொடங்கினர்.  

இந்நிலையில், இந்த வழக்கில் 19 வயது இளைஞர் ஒருவரையும் 17 வயது சிறுவன் மற்றும் 10 வயது சிறுவன் உள்ளிட்ட 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதில் இருவர் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர்கள். ஒருவர் புதுக்கோட்டை மாவட்டம் அண்ணா பகுதியை சேர்ந்தவர் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

click me!