வங்கி லாக்கரை உடைத்து 4 கிலோ தங்கம் கொள்ளை !! லட்சக்கணக்கான ரூபாய் , ஆவணங்கள் மாயம் !!

By Selvanayagam PFirst Published Jan 29, 2019, 8:44 AM IST
Highlights

திருச்சி சமயபுரம் சாலையில் உள்ள வங்கி சுவரில் துளையிட்டு 4 கிலோ தங்கம் மற்றும் லட்சக்கணக்கான ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். 4 பேருக்கு சொந்தமான 5 லாக்கர்கள் உடைக்கப்பட்டன.

திருச்சி அருகே வங்கி சுவரில் துளைபோட்டு 4 கிலோ தங்கம் மற்றும் பல லட்சம் ரூபாய் கொள்ளை போனது. பாதுகாப்பு பெட்டகங்களில் திட்டமிட்டு கைவரிசை நடத்திய கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி-சமயபுரம் சாலையில் டோல்கேட்டில் தேசியமயமாக்கப்பட்ட பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளது. இந்த வங்கியில் தனிநபர் பாதுகாப்பு பெட்டக வசதி இருக்கிறது. கடந்த 25-ந்தேதி மாலையில் வங்கியை ஊழியர்கள் பூட்டிவிட்டு சென்றனர்.

 2 நாட்கள் விடுமுறை முடிந்து நேற்று காலை வங்கியை திறந்து ஊழியர்கள் உள்ளே வந்தனர். சிறிதுநேரத்தில் வாடிக்கையாளர் ஒருவர் தனது பாதுகாப்பு பெட்டகத்தில் உள்ள பொருளை எடுக்க வந்தார். அவருடன், வங்கி ஊழியர் ஒருவரும் பாதுகாப்பு பெட்டகம் உள்ள அறையின் கதவை திறந்து உள்ளே சென்றார்.

அப்போது 5 பாதுகாப்பு பெட்டகம் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு ஊழியர் அதிர்ச்சி அடைந்தார். அதில் பொருட்கள் ஏதும் இன்றி வெறுமையாக கிடந்தது. மேலும், அறையின் பின்பக்க சுவரில் ஒரு ஆள் நுழையும் அளவுக்கு துளையிடப்பட்டு இருந்தது. அப்போது தான் மர்ம நபர்கள் வங்கி சுவரில் துளையிட்டு பெட்டகத்தை உடைத்து கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் அதிகாரிகள் அங்கு வந்து விசாரணை நடத்தினார்கள். முதற்கட்ட விசாரணையில் 4 கிலோ தங்கம் மற்றும் பல லட்சம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது.

வங்கியின் பின்புறம் கொள்ளையர்கள் சுவரில் துளையிட்ட இடத்துக்கு போலீசார் சென்று பார்த்தனர். அங்கு கியாஸ் சிலிண்டர், வெல்டிங் எந்திரம், கடப்பாரை, சுத்தியல் உள்ளிட்டவை கிடந்தன. கியாஸ் வெல்டிங் எந்திரத்தை பயன்படுத்தி வங்கி பெட்டகத்தை உடைத்து கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

கண்காணிப்பு கேமராவில் ஏதாவது பதிவாகி இருக்கிறதா? என போலீசார் பார்வையிட முயன்றனர். ஆனால் கொள்ளையர்கள் கண்காணிப்பு கேமராவில் காட்சிகள் பதிவாகி இருந்த ஹார்டு டிஸ்க்கையும் கழட்டி எடுத்து சென்றது தெரியவந்தது.

மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் உள்ள வங்கியில் கொள்ளையர்கள் துணிச்சலாக புகுந்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் வாடிக்கையாளர்கள் உள்பட அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.இதே வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் 2013-ம் ஆண்டு  26 லட்சம் ரூபாய் கொள்ளை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!