ஓசியில் பிரியாணி கேட்டு தி.நகர் காவல்நிலைய காவலர்கள் ரகளையில் ஈடுபட்டனர். அப்போது கடை உரிமையாளரான இஸ்லாமியரை தீவிரவாதியோடு ஒப்பிட்டு பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓசியில் உணவு கேட்டு ரகளை
சென்னை தி நகர் சிவஞானம் தெருவில் உணவு கடை நடத்தி வருபவர் காசிம், நேற்று மதியம் இவரது ஓட்டலுக்கு சென்ற இரண்டு காவலர்கள் பணம் கொடுக்காமல் ஓசியில் பிரியாணி கேட்டுள்ளனர். அதற்கு காசிம் மறுப்பு தெரிவித்து, இன்னும் வியபாரம் தொடங்கவில்லை என்றும் அதனால் இலவசமாக தர முடியாது பணம் கொடுத்து பெற்று செல்லமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த காவலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து இரண்டு காவலர்களும் அங்கிருந்து சென்ற நிலையில் மீண்டும் இரவு மது போதையில் ஓட்டலுக்கு வந்து உணவு சாப்பிட்டுள்ளனர்.
இதற்கு பணம் கொடுக்க மறுத்த காவலர்கள் கடை உரிமையாளரை இனி கடையை நடத்த முடியாது என்றும், நீங்கள் எல்லாம் முஸ்லீம் தானே தீவிரவாதத்தை வளர்ப்பதற்காக கடை நடத்துகிறீர்களா என மதரீதியாக கடை உரிமையாளரை உணவு சாப்பிட வந்த பிற வாடிக்கையாளர்களின் முன்னிலையில் இரு காவலர்களும் பேசி உள்ளனர்.
பைக்கை விட்டு விட்டு ஓட்டம்
இதனை அங்கு உணவு அருந்திய சிலர் வீடியோ எடுத்த நிலையில் இருசக்கர வாகனத்தை அங்கயே விட்டு விட்டு காவலர்கள் சென்றுள்ளனர். இது குறித்து கடை உரிமையாளர் காவல் கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்த நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விசாரணை மேற்கொண்ட போது விட்டு சென்ற இருசக்கர வாகனம் தி நகர் காவல்நிலையத்தில் பணிப்புரியும் ஆனந்த் மற்றும் ஜெயபால் என்பவருடையது என தெரியவந்துள்ளது. மதுபோதையில் இரண்டு காவலர்கள் ஓசியில் பிரியாணி மற்றும் உணவு கேட்டு தகராறு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்
இனிமே பூஜை செய்ய வந்த கொலை செய்து விடுவேன்.. ஜெ. தீபா மிரட்டுறாங்க.. கதறும் போயஸ் கார்டன் பூசாரி..!