
விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட சிறைக்கைதி ஒருவர் போலீஸ் வேனிலேயே கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சிறை என்றால் நரகம் என்பது மாறி இப்போது நிம்மதி தரும் இடமாக மாறிப்போயுள்ளது, அந்த அளவுக்கு அங்கு செல்பவர்களுக்கு ராஜபோக வாழ்க்கை கிடைக்கிறது என்கிற பேச்சு பரவலாக இருந்து வருகிறது. ஒருவர் வீட்டில் எப்படி எல்லா வசதிகளுடன் இருக்க முடியுமோ அதேபோல் சிறையிலும் கட்டில் மெத்தை செல்போன் என அனைத்து வசதிகளும் சட்டவிரோதமாக அவர்களுக்காக கிடைப்பதாக கூறப்படுகிறது. இது ஒரு புறம் உள்ள நிலையில் நீதிமன்ற விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட சிறைக் கைதி ஒருவர் போலீஸ் வேனிலேயே பிறந்தநாள் கொண்டாடியுள்ள சம்பவம் நடந்துள்ளது. முழு விவரம் பின்வருமாறு:-
மகாராஷ்டிர மாநிலம் கொலை வழக்கு ஒன்றில் குற்றம்சாட்டப்பட்டு கடந்த நான்கு ஆண்டுகளாக சிறையில் இருந்து வருபவர் ரோஷன் ஜூ (28) இவர் கல்யாண் அதர்வாடி சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில் வழக்கு விசாரணைக்காக அவரை போலீசார் நீதிமன்றம் அழைத்து வந்தனர். அப்போது அவரது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் அவரது அடியாட்கள் நீதிமன்ற வாசலில் தயாராக இருந்தனர், அப்போது ரோஷனுடன் போலீஸ் வேன் அங்கு வந்தது, அங்கிருந்து அவரது அடியாட்கள் ஜன்னல் வழியாக வேனுக்குள் இருந்த ரோஷனுக்கு கேக் கொடுத்தனர் அவரும் வேனில் இருந்தபடி கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார்.
இதுதொடர்பான புகைப்படங்கள் வீடியோக்கள் வாட்ஸ் அப்பில் பரவியது, இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, போலீஸ் வேனில் இருந்தபடியே கைது ஒருவர் பிறந்தநாள் கொண்டாடுவதை சமூக வலைத்தளத்தில் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஒரு கைதி போலீஸ் வேனில் பிறந்தநாள் கொண்டாடும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு வந்துவிட்டது, அவர் கேக் வெட்டி கொண்டாடும் வரை அங்கு இருந்த போலீசார் என்ன செய்து கொண்டிருந்தனர் என்றும் கேள்விக்கணைகள் எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள காவல்துறை, விசாரணைக்கு நீதிமன்றம் செல்லும் போது அனைத்து பாதுகாப்பு நெறி முறைகளையும் பின்பற்ற வேண்டும் என்றுத்தான் அறிவுறுத்தி அழைத்து செல்வோம்.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு ஆஜராகும் போது விசேஷ சிறப்பு போலீஸ் குழுவுடன்தான் அழைத்து சென்றோம், அப்போது கைதிகளின் நடவடிக்கைகள் உன்னிப்பாக கண்காணிக்கப்படும்,ஆனால் அதிகாரிகளுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற தீய நோக்கத்துடன் அந்தக் கைதி இப்படி நடந்து கொண்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த கைதியை அழைத்துச் சென்ற எஸ்கார்ட் குழுவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி மீது பல காவல் நிலையங்களில் கொலை மற்றும் கொலை முயற்சி கொள்ளை வழக்குகள் இருக்கிறது, 2017 ஆம் ஆண்டு கான்ஸ்டபிளை தாக்கிய வழக்கும் அவர் மீதுள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.