அயர்லாந்தில் இருந்து 9000 கோடி பணம் வருவதாக கூறி தொழிலதிபர்களிடம் நூதன மோசடி.! பொறி வைத்து பிடித்த போலீஸ்

By Ajmal Khan  |  First Published Sep 3, 2023, 9:35 AM IST

ஆர்பிஐ அதிகாரி ஒருவர் மூலமாக வெளிநாட்டிலிருந்து ஒன்பதாயிரம் கோடி ரூபாய் கோவா நிறுவனத்தில் முதலீடு செய்யப்படுவதாக கூறி தொழிலதிபர்களை நம்ப வைத்து பல கோடி ரூபாய் மோசடி செய்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். 


வெளிநாட்டில் இருந்து 9000 கோடி முதலீடு

குறுக்கு வழியில் அதிக பணம் கிடைக்கும் என்ற ஆசையில் ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்கள். அந்த வகையில், சென்னையில் எஸ் வி டெக் இன்ஜினியரிங் என்ற தனியார் நிறுவனத்தை வீரமணி என்பவர் நடத்தி வருகிறார்.  சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில்,

Tap to resize

Latest Videos

கோவாவை சேர்ந்த கோல்டன் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் எனக் கூறி ரங்கராஜன்(38), சுரேஷ்குமார்(48) ராஜேஷ்(44) ஆகிய மூவர் நட்பாக பழகியதாக தெரிவித்தார். தங்கள் நிறுவனத்திற்கு அயர்லாந்தில் இருக்கும் மருத்துவ நிறுவனம் மூலமாக தொழில் முதலீடு என்ற அடிப்படையில் 9,102  கோடி ரூபாய் முதலீடு வரப்போவதாகவும் அதன் மூலம் வட்டியில்லா கடன் 5 கோடி ரூபாய் தருவதாக கூறி ஆசை வார்த்தை காட்டியதாக தெரிவித்துள்ளார். 

வட்டியில்லா கடன் தருவதாக மோசடி

குறிப்பாக டெல்லியில் உள்ள ஆர் பி ஐ அதிகாரி மூலமாக கோவாவில் உள்ள தங்கள் நிறுவனத்திற்கு இந்த பணம் வரவுள்ளதாகவும் தெரிவித்ததாக கூறியுள்ளார். இவ்வாறாக பணம் பல தவணைகளில் இந்தியாவில் வரும் போது அதற்கான மத்திய நிதி அமைச்சக அனுமதி மற்றும் வருமானவரித்துறை அனுமதி சான்றிதழ் என போலீசான்றிதழ்களை காட்டி நம்ப வைத்து பண மோசடி செய்ததாக தெரிவித்துள்ளார். இந்த ஒன்பதாயிரம் கோடி ரூபாய் பணத்தை இந்தியாவிற்குள் கொண்டு வந்தால் மட்டுமே வட்டியில்லா கடன் 5 கோடி ரூபாய் கிடைக்கும் என்ற தெரிவித்து அதற்கான நடைமுறைச் செலவு எனக்கு கூறி சுமார் ஒரு கோடி 40 லட்ச ரூபாய் அளவில் பல்வேறு தவணையில் பணத்தை வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்ந்து பணத்தை கொடுத்த பிறகும் வட்டி இல்லா கடன் வராத காரணத்தினால் கொடுத்த பணத்தை வீரமணி திருப்பி கேட்ட போது ரங்கராஜன் மற்றும் கூட்டாளிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனை அடுத்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் இந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தனர். இந்நிலையில் இந்த மோசடி கும்பலைச் சேர்ந்த ரங்கராஜன் சுரேஷ்குமார் மற்றும் ராஜேஷ் ஆகிய மூவரை கைது செய்துள்ளனர். ரெங்கராஜனை திருவண்ணாமலையிலும் சுரேஷ்குமார் என்பவரை பெங்களூரிலும் ராஜேஷ் என்பவர் சென்னையில் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன்  மத்திய குற்றப்பிரிவு போலீசார் சுற்றி வளைத்து பிடித்துள்ளனர். 

ஏமாந்த தொழிலதிபர்கள்

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. குறிப்பாக பெங்களூரைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் பல்வேறு மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது இதன் காரணமாக தொடர்ந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வரும் சுரேஷ்குமார் பெங்களூரில் பல்வேறு நட்சத்திர ஓட்டல்களில் மட்டுமே தங்கி பல தொழில் அதிபர்களை இதே போன்று மோசடிக்கு உள்ளாக்கியது தெரியவந்துள்ளது. சென்னையில் கம்ப்யூட்டர் பட்டதாரியான ரங்கராஜன் யூடியூப் சேனலை நடத்தி வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. தனது கூட்டாளியான ராஜேஷ் உடன் சேர்ந்து தொழிலதிபர்களை ஆசை வார்த்தை காட்டி சென்னையில் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 இவர்களது வங்கி கணக்குகளை ஆய்வு செய்த போது சுமார் 10 கோடி ரூபாய்க்கு மேல் பல தொழிலதிபர்கள் இடம் மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இன்னும் பல தொழிலதிபர்கள் இதுபோல் மோசடிக்கு உள்ளாகி இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஆர்பிஐ அதிகாரி மூலமாகவே இந்தியாவிற்குள் இந்த அயர்லாந்து மருத்துவ நிறுவனம் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பணத்தை கோவாவில் உள்ள கோல்டன் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திற்கு முதலீடு செய்ய உள்ளதாக கூறி பல ஆவணங்களை காட்டியதன் காரணமாகவே பல தொழிலதிபர்கள் ஏமாந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பல கோடி மோசடி செய்து உல்லாச வாழ்க்கை

இந்த ஒன்பதாயிரம் கோடி ரூபாய் பணத்தை இந்தியாவில் கொண்டு வருவதற்கு தொழிலதிபர்கள் தாங்கள் உதவுவதன் மூலம் தங்களுக்கு வட்டி இல்லா கடன் கிடைக்கும் என்ற ஆசையில் பணத்தை கொடுத்து ஏமாந்துள்ளனர். இதை நம்ப வைப்பதற்காக அவ்வப்போது மத்திய நிதி அமைச்சகம் மற்றும் வருமானவரித்துறை அலுவலகம் சென்று சான்றிதழ்கள் பெற்று வருவதாகவும் பல்வேறு போலியான செக்குகளை காட்டியும் தொழிலதிபர்களை நம்ப வைத்துள்ளனர்

இவ்வாறாக தொழிலதிபர்கள் இடமிருந்து மோசடி செய்யப்பட்ட பணத்தை வைத்துக் கொண்டு ரங்கராஜன் சென்னையில் நான்கு சொகுசு பங்களாக்களையும் சொகுசு கார்களையும் வாங்கி சொத்துக்களை குவித்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது இதனை அடுத்து ரங்கராஜன் சொத்துக்களையும் வங்கி கணக்குகளையும் முடக்கும் நடவடிக்கையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இந்த மூவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். 

இதையும் படியுங்கள்

இன்பநிதி பெயரில் பாசறை தொடங்கிய திமுக நிர்வாகிகள்..! அதிரடி நடவடிக்கை எடுத்த ஸ்டாலின்

click me!