
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே நாடார் மக்கள் இயக்கத்தின் மாநில செயலாளர் சரவணகுமார் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சமீப காலமாக அரசியல் பழிவாங்கும் கொலைகள், ரியல் எஸ்டேட் கொலைகள் அதிகரித்துள்ளன. இதை தடுக்க காவல்துறை எத்தனையோ நடவடிக்கைகளை எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை, தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு இது போன்ற கூலிப்படை கொலைகளைக் கட்டுப்படுத்த பழைய குற்ற வழக்குகள் தொடர்புடைய ரவுடிகள் மற்றும் பழைய குற்றவாளிகளை கண்காணிக்க உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர், அதில் ஏராளமான ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். பல கொலை சதிகள் முறியடிக்கப்பட்டன.
இது அத்தனையும் செய்த பின்னரும் கூலிப்படை கொலைகள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது, எதிர்க்கட்சிகளும் திமுக அரசை சட்டம்-ஒழுங்கை காரணம் காட்டி சரமாரியாக விமர்சித்து வருகின்றன. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட காவல்துறை கடுமையாக போராடிய நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே நாடார் மக்கள் இயக்கத்தின் மாநில செயலாளர் 3 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். திருச்செந்தூர் அருகே ராணி மகாராஜபுரத்தில் நாடாளும் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.
இவரது மனைவி ஆறுமுகநேரி பேரூராட்சியின் வார்டு கவுன்சிலராக உள்ளார். இலையில் சரவணகுமார் அரசியல் மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல வேலைகளைச் செய்து வருகிறார். அதில் அவருக்கு ஏற்கனவே சிலருடன் முன்விரோதம் இருப்பதாக தெரிகிறது. இதுதொடர்பாக அவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளது. அந்த வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் அம்மன்புரம் என்ற பக்கத்து கிராமத்தில் அவருக்கு நிலங்கள் உள்ளதாகவும் எனவே இன்று அதிகாலை மகாராஜபுரத்தில் இருந்து அம்மன்புரத்திற்கு டீ குடிப்பதற்காக பைக்கில் வந்ததாகவும், அப்போது கடை ஒன்றில் நிறுத்திவிட்டு டீ குடித்துக்கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக ஆயுதங்களால் சரவணகுமாரை சுற்றி நின்று வெட்டியது.
அதில் எங்கும் தப்பிக்க முடியாமல் அவர் அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதையடுத்து அந்த கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து மாயமானது. சிறிது நேரத்தில் சரவணகுமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அங்கிருந்தவர்கள் அலறி அடித்து ஓடினர். மேலும் இதுகுறித்து போலீசாருக்கு பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் வைகுண்டம் டிஎஸ்பி போலீஸ் படையுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரவணகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக நடந்ததா அல்லது நிலத்தகராறில் கொலை நடந்ததா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். சரவணகுமார் அரசியல், ரியல் எஸ்டேட்டில் கொடிகட்டி பறந்தவர் என்பதால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.