சினிமா பட பாணியில் மூத்த மகனை கொலை செய்து வீட்டில் வைத்து விட்டு இளைய மகனுக்கு திருமணம் நடத்தி முடித்த தந்தை..

By Ajmal KhanFirst Published Jun 3, 2022, 7:53 AM IST
Highlights

மூத்தவன்  இருக்கும் போது இளையவனுக்கு திருமணம் செய்து வைக்க எதிர்ப்பு தெரிவித்த மகனை தந்தை கொலை செய்து விட்டு இளைய மகனுக்கு திருமணம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளைய மகனுக்கு திருமணம்

தேனி மாவட்டம் சின்னமனூர் காந்திநகர் காலனியைச் சேர்ந்தவர் அய்யர்சாமி (52).இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரது மூத்த மகன் மூவேந்தன் (30)மற்றும் இளைய மகன் அரவிந்தன் (27).இதில் மூத்த மகன் மூவேந்தன் தவணை முறையில் பொருட்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் இளைய மகன் அரவிந்தன் உறவுக்கார பெண்ணை காதலிப்பதாகத் தெரிவித்ததையடுத்து பெற்றோர்கள் சம்மதத்துடன் அவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. தனக்கு திருமணம் ஆகாத நிலையில் தம்பிக்கு திருமணம் செய்து வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரவிந்தன் பலமுறை  பெற்றோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அரவிந்தனுக்கு நிச்சயம் செய்வதற்காக அய்யர்சாமியின் குடும்பத்தினர் மண்டபத்திற்கு புறப்பட்ட போது அவருடன் மூவேந்தன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்துள்ளார். மூவேந்தனை சமாதானம் செய்துவிட்டு வருகிறேன்,நீங்கள் மண்டபத்திற்கு செல்லுங்கள் என்று தனது மற்ற குடும்ப உறுப்பினர்களையும் திருமணத்திற்கு வந்த உறவினர்களையும் மண்டபத்திற்கு அனுப்பி வைத்த அய்யர்சாமி அவரது மூத்த மகன் மூவேந்தனை சமாதானம் செய்ய எவ்வளவோ முயன்றுள்ளார். 

மூத்த மகனை கொலை செய்த தந்தை

ஆனாலும் மூவேந்தன் சமாதானம் ஆகாமல் அவரது தந்தையுடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்ததால்,ஆத்திரத்தில் அங்கிருந்த இரும்பு கம்பியை எடுத்து மூவேந்தனின் தலையில் அவரது தந்தை பலமாகத் தாக்கியதில் மூவேந்தன் அந்த இடத்திலேயே மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். மயக்கமடைந்த மூவேந்தனை வீட்டில் உள்ள ஒரு அறையில் அடைத்து,பூட்டிவிட்டு அய்யர்சாமியும் மண்டபத்திற்கு சென்று விட்டார்.நேற்று முன்தினம் இரவு நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் நேற்று திருமணமும் நடைபெற்று முடிந்தது. திருமணம் முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது மூவேந்தன் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தார்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்காமல் அவசர அவசரமாக அவரது உடலை அடக்கம் செய்ய முயன்றுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக சின்னமனூர் கிராம நிர்வாக அலுவலர் பிரபு சின்னமனூர் காவல்துறையிடம் புகார் அளித்தார். 

தந்தை கைது

புகாரின் பேரில் ஆய்வாளர் சேகர் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. காவல்துறையினர் அதனைத் தடுத்து பிரபுவின் உடலை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ பரிசோதனை அறிக்கையில் தலையில் அடிபட்டதாலேயே மூவேந்தன் இறந்துவிட்டார் என்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அவரை இரும்புக் கம்பியால் பின்னத் தலையில் பலமாகத் தாக்கி கொலை செய்த அவரது தந்தை அய்யர்சாமியை காவல்துறையினர் கைது செய்து, அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். சினிமா பாணியில் மூத்த மகனை கொலை செய்து வீட்டில் அடைத்து வைத்துவிட்டு யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் இளைய மகனுக்கு திருமணம் நடத்தி முடித்த தந்தையின் செயல் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

click me!