
ரேஷன் அரிசி கடத்தல் :
கன்னியாகுமரி மாவட்டம் எஸ். டி மங்காடு, பணமுகம் பகுதியை சேர்ந்தவர் அஜின்(26) மற்றும் குளப்புறம் பொன்னப்ப நகர் பாறையடி விளையை சேர்ந்தவர் ஷிஜி (43)ஆகிய இருவரும் குளப்புறம் அன்னிகரை பகுதியில் சாலை ஓரத்தில் கடந்த 26-ம் தேதி இரவு 10 மணிக்கு பேசிக்கொண்டு நின்று உள்ளனர்.
அப்போது வேகமாக வந்த கேரளா பதிவெண் கொண்ட ஸ்கார்ப்பியோ காரிலிருந்து திபுதிபு வென்று இறங்கிய கும்பல் கையிலிருந்த கத்தி , வெட்டுக்கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் ரேஷன் அரிசி கடத்துவதை போலீசுக்கு தகவலா கொடுக்குற ? என கேட்டு ஆக்ரோசமாக கத்தி, அஜினின் முதுகு, தோள்பட்டை, தலை, கால் , வயிறு போன்ற இடங்களில் சரமாரியாக வெட்டி சாய்த்தனர்.
இதனால் அலறிய அஜின் அப்பகுதியில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்து உள்ளார். அதேபோல அவருடன் நின்ற ஷிஜியின் வயிறு, கழுத்து , கால் மற்றும் உடலில் உள்ள பல்வேறு பாகங்களை வெட்டி காயப்படுத்தி உள்ளனர். இதனால் ஷிஜியும் துடிதுடித்து அப்பகுதியில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்து உள்ளார். இதனால் அப்பகுதியில் அலறல் சத்தத்தை கேட்ட பொதுமக்கள் அங்கு வந்து பார்த்தபோது இருவரும் உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளனர். பொதுமக்கள் வருவதை பார்த்ததும் அந்தக் கும்பலினர் ஸ்கார்பியோ காரை அங்கேயே விட்டு விட்டு சென்றுள்ளனர்.
வெளியான பரபரப்பு தகவல்கள் :
அந்த காரினுள் 1500 கிலோ ரேஷன் அரிசி இருந்துள்ளது. இதுகுறித்து களியக்காவிளை போலீசாருக்கு அப்பகுதியினர் தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த களியக்காவிளை போலீசார் அவர்களை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அவர்களின் நிலைமை மோசமாக இருந்தது தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அவர்களை வெட்டிய கும்பல் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளது. அதாவது அவர்களை வெட்டிக் காயப்படுத்திய கும்பலினர் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு அரிசி கடத்தும் முக்கியபுள்ளிகள் என தெரியவந்தது. இதில் முக்கிய குற்றவாளிகளான ஜோஸ் (22) , காப்புக்காடு மாராயபுரம் பாறவிளையை சேர்ந்த மகேந்திர குமார் என தெரியவந்துள்ளது.
மேலும் காரையும் , 1500 கிலோ ரேஷன் அரிசியையும் போலீசார் பறிமுதல் செய்தர். இச்சம்பவம் களியக்காவிளை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஷிஜி (43) என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் , பதட்டத்தையும் உருவாக்கியுள்ளது.