24 ஆண்டுகளுக்கு முன்பு செய்த கொலை.. கையும் களவுமாக மாட்டிக்கொண்ட ராணுவ வீரர்.. சிக்கிய பின்னணி என்ன ?

By Raghupati RFirst Published Dec 28, 2021, 9:24 AM IST
Highlights

24 ஆண்டுகளுக்கு முன்பு செய்த கொலையில் தற்போது சிக்கியுள்ளார் முன்னாள் ராணுவ வீரர். எதற்காக கொலை செய்தார் ? என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சேலம், ஓமலூரை அடுத்த டேனீஸ்பேட்டை ஊராட்சி பெரியவடகம்பட்டி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த தனகோபால் என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்தது. இந்த நிலையில் கடந்த 1997-ம் ஆண்டு ஜூலை மாதம் 7-ந் தேதி அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது லட்சுமணனை, தனகோபால் மற்றும் அவரது அண்ணன் வேணுகோபால், இவர்களது தந்தை வெங்கட்டன் ஆகிய 3 பேரும் சேர்ந்து தாக்கி கொலை செய்தனர். இது சம்பந்தமாக தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தனகோபால், வெங்கட்டன், வேணுகோபால் ஆகியோரை தேடி வந்தனர். 

தொடர்ந்து தனகோபால், வெங்கட்டன் ஆகியோர் பவானி கோர்ட்டில் சரண் அடைந்தனர். வேணுகோபால் தலைமறைவாக இருந்தார். இதனிடையே இந்த கொலை வழக்கு சேலம் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து தனகோபால், வெங்கட்டன் ஆகிய இருவருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் போலீசார் தொடர்ந்து வேணுகோபாலை தேடி வந்தனர்.

இந்த நிலையில் வேணுகோபால் சேலம் குரங்குச்சாவடி நரசோதிப்பட்டியில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து தீவட்டிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று அங்கு சென்று வேணுகோபாலை கைது செய்தனர்.

1997-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் 24½ ஆண்டுகளுக்கு பிறகு கொலையாளி கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் கூறுகையில், வேணுகோபால் ராணுவ வீரராக பணியாற்றி வந்துள்ளார். அவர் 1989-ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்துள்ளார். பின்னர் அவர் சொந்த ஊருக்கு வந்துள்ளார். தொடர்ந்து கொலை சம்பவத்துக்கு பிறகு அவர் மீண்டும் ராணுவத்துக்கு சென்று இருக்கிறார். 

பின்னர் கடந்த 2019-ம் ஆண்டு பணி மூப்பு அடைந்து ஓய்வு பெற்றுள்ளார் என்றனர். இதனையடுத்து வேணுகோபால் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். 24½ ஆண்டுகளுக்கு பிறகு கொலையாளியை கைது செய்த செய்த தீவட்டிப்பட்டி போலீசாரை சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் பாராட்டினார்.

click me!