ஊருக்கு வெளியில் உள்ள கோயிலில் தனியாக தங்கி பூசை செய்துவந்த பெண் பூசாரி துர்மரணம்..? அடுத்தடுத்த 4 கொலைகள்.

By Ezhilarasan BabuFirst Published Aug 31, 2021, 4:52 PM IST
Highlights

உடனே அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ஹைதராபாத்தில் கோவிலில் தனியாக தங்கி பூசை செய்து வந்த பெண் பூசாரி ஒருவர் கொடூரமாக முறையில் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் மிகுந்த அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. கடந்த 38 நாட்களில் இது 4வது மரணம் என அப்பகுதி மக்கள் பதறுகின்றனர். 

நாளேடை திறந்தாலே கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றச் செய்திகளை முழுதும் ஆக்கிரமித்துள்ளது. அந்த அளவிற்கு  எந்த ஒரு மாநிலத்தை எடுத்துக் கொண்டாலும் சட்ட ஒழுங்கு என்பது கேள்விக் குறியாகவே இருந்து வருகிறது. இந்த வரிசையில் கேட்போரை அச்சத்தில் உறைய வைக்கும் வகையில் கொடூர சம்பவம் ஒன்று தெலங்கானா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. ஹைதராபாத்தை ஒட்டியுள்ள பஹாதிஷரீப் காவல் நிலைய சரகத்திற்குள் வசித்து வருபவர், ரங்ஷிக் ஷோபா சர்மா (76)  மற்றும் அவரது மகன் மனோஜ் ஷர்மா, இவர்கள் இருவரும் ரங்கநாயகலு கோவிலில் பூசாரிகளாக இருந்து வருகின்றனர். இவர்களது மொத்த குடும்பமும் நகர் பகுதியில் வசித்து வரும் நிலையில், ஷோபா ஷர்மா மட்டும் ரங்கநாயகலு கோவிலில் தனியாக தங்கி பூஜை செய்து வந்தார். 

அவர்களது குடும்பத்தார் தனியாக தங்க வேண்டாம் என எவ்வளவோ சொல்லியும் ஷோபா கேட்கவில்லை, இந்நிலையில் இம்மாதம் 28 ஆம் தேதி இரவு 7:30  மணி அளவில் அவரது மகன் மனோஜ், தாய் ஷோபாவுக்கு செல்போனில் அழைத்தார். ஆனால்  தாய் செல்போனை எடுக்கவில்லை, இதனால் பதற்றம் அடைந்த அவர் மாமிடி பள்ளியில் உள்ள  தனது நண்பருக்கு அழைத்து, கோவிலுக்கு சென்று தனது தாயாரை பார்க்கும்படி கூறினார். அதனையடுத்து அந்த இளைஞர் அங்கு வந்து பார்த்த போது, அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஷோபா இறந்துகிடந்தார். உடனே அந்த இளைஞர் அலறியடித்துக்கொண்டு அவரது மகன் மனோஜ்க்கு தகவல் கூறினார். உடனடியாக அங்கிருந்து வந்த மனோஜ், தனது தாயார் கழுத்து நெறிக்கப்பட்டு இறந்து கிடந்ததைக் கண்டு கதறி அழுதார். 

உடனே அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் ஷோபாவின் முகம் கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். பின்னர் அவர் இருந்த அறையில் அலமாரி கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தன, ஷோபா தனியாக இருப்பதை அறிந்து கொண்ட மர்ம நபர்கள் இந்த கொலையை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்நிலையில் மனோஜின் புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். பஹாதிஷரீப் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 38 நாட்களில் இதே போன்ற அடுத்தடுத்த 4 கொலைகள் நடந்திருப்பது, உள்ளூர் மக்களை பீதி அடைய செய்துள்ளது.
 

click me!