திருச்சி பகுதியில் பணத்துக்காக 8 பேரை துடிக்க, துடிக்க கொலை செய்த சப்பாணி என்பவருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
8 பேரை துடிக்க, துடிக்க கொலை
கொலை வழக்குகளில் சிக்கியவர்கள், அழுது புரண்டு, முகத்தை துண்டால் மூடிக்கொண்டு வருவதை பார்த்திருப்போம். ஆனால் பணத்திற்காக 8 பேரை துடிக்க, துடிக்க கொலை செய்தவர் சர்வ சாதாரணமாக சிரித்துக்கொண்டே நீதிமன்றத்திற்கு வந்த காட்சி பார்ப்பவர்கள் அதிர்ச்சி அடைய வைத்தது. அப்படிப்பட்டவர் யார் ? என்ன குற்றம் செய்தார் என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்தது. கடந்த ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு விலங்கு என்ற வெப் சீரிஸ் வெளியானது. அதில் பண தேவைக்காக நண்பர்கள், தனது ஊர்காரர்கள் என 8 பேரை அடுத்தடுத்து கொலை செய்திருப்பார் கிச்சா என்பவர், அப்படி கொலை செய்தவர் எதுவும் தெரியாத அப்பாவி போல் காவல் நிலையத்திலேயே எடு பிடியாக வேலை பார்ப்பார். அது போன்ற ஒருவர் தான் இந்த சப்பாணி,
பணத்திற்காக கொலை
திருச்சியை மாவட்டம், திருவெறும்பூர் அருகே கிருஷ்ணசமுத்திரத்தை சேர்ந்தவர் சப்பாணி. இவர் கடந்த 2016-ம் ஆண்டு இவரது நண்பரான வேங்கூரை சேர்ந்த தங்கதுரை மற்றும் அதே பகுதியை சேர்ந்த தேக்கன், விஜய் விக்டர் உள்பட 8 பேரை பணம், நகைக்கு ஆசைப்பட்டு கொலை செய்து அருகில் உள்ள புதர்களில் புதைத்துள்ளார். ஆனால் இது தெரியாமல் காணமல் போனவர்களை கண்டுபிடித்து தரும்படி உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இதனையடுத்து திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடைபெற்ற விசாரணையில், செய்து, சப்பாணி என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் சப்பாணி கொலை செய்தவர்களின் உடல்களை கிருஷ்ணசமுத்திரம் பகுதியில் உள்ள வயல்வெளியில் புதைத்ததாக போலீசாரிடம் கூறினார்.
யார் இந்த சைக்கோ கொலையாளி
இதையடுத்து அவரை அழைத்து சென்ற போலீசார், கொலை செய்து புதைக்கப்பட்டவர்களின் உடல்களை தோண்டி எடுத்து அதே இடத்திலேயே மருத்துவர்கள் மூலம் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். பின்னர் தோண்டி எடுக்கப்பட்ட உடல்கள் மீண்டும் புதைக்கப்பட்டன. சப்பாணி ஒவ்வொருவரிடமும் நட்பாக பேசி அவர்களை தனியாக அழைத்து சென்று யாரும் பார்க்காத நேரத்தில் இந்த கொடூர கொலையை அரங்கேற்றியது தெரியவந்தது. இந்த தகவல் வெளியானது தமிழகமே அதிர்ச்சி அடைந்தது. இந்த வழக்கு திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்க தேதி குறிக்கப்பட்டது.
வாழ்நாள் முழுவதும் சிறை
இதற்காக சப்பாணியை போலீசார் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது சப்பாணி வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி என கெத்தாக சிரித்த முகத்தோடு வந்தார். இதனையடுத்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி பாபு, இந்த வழக்கின் குற்றவாளியாக சப்பாணியை உறுதி செய்தார். மேலும் 8 பேரை கொலை செய்த சப்பாணிக்கு 364, 394 இரு பிரிவுகளுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை, மற்றொரு 201 பிரிவுக்கு 3 சிறைதண்டனை, நான்காவது பிரிவான 302 வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து திருச்சி முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி பாபு பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.
இதையும் படியுங்கள்