சென்னை விம்கோ நகர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இளம்பெண் ஒருவர் செல்போனில் பேசி கொண்டு சென்று கொண்டிருந்த போது விரைவு ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
ரயில் விபத்து- இளம்பெண் பலி
சென்னை ஏர்ணாவூர் காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஷாலினி இவர் டிகிரி முடித்து விட்டு ஆவடி அருகே ப்யூட்டி பார்லரில் வேலை செய்து வருகிறார்.நேற்று இரவு வழக்கம் போல் பணி முடித்து விட்டு ஆவடியில் இருந்து மின்சார ரயிலில் பயணம் செய்து விம்கோநகர் ரயில் நிலையத்தில் வந்து இறங்கியுள்ளார். இதனையடுத்து தனது செல்போன் மூலம் யாரிடமோ பேசி கொண்டு ரயில் தண்டவாளத்தின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த பகுதியில் வந்த விரைவு ரயில் ஷாலினி மீது மோதியுள்ளது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரயில் தண்டவாளம் அருகே உயிருக்கு போராடிக் கொண்டு இருந்துள்ளார். இதனிடையே நீண்ட நேரமாகியும் ஷாலினி வீட்டிற்கு வராத காரணத்தால்,
உயிருக்கு போராடிய பரிதாபம்
ஷாலினியின் குடும்பத்தினர் விம்கோ ரயில் நிலையம் அருகே தேடி பார்த்த போது அங்கு உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஷாலினியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேல்சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுமதிக்கும்படி மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதனையடுத்து அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு ஷாலினியை கொண்டு சென்ற நிலையில், ஷாலினியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து கொருக்குப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொங்கல் பண்டிகை தினத்தில் இளம்பெண் உயிரிழந்த நிகழ்வு அப்பகுதி மக்களை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்
இபிஎஸ்- ஓபிஎஸ் ஐ விமர்சித்த மாஜி அமைச்சர் ஒட்டிய சர்ச்சை போஸ்டர்..! அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சி