பெண் போல இருப்பதாக கேலி செய்த தோழிகள்! மனம் உடைந்த சிறுவன் தூக்கிட்டுத் தற்கொலை!

By SG Balan  |  First Published Oct 4, 2023, 2:21 PM IST

சிறுவனைக் கொடுமைப்படுத்திய இரண்டு மாணவிகள் மற்றும் வகுப்பு ஆசிரியர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


ஹரியானா மாநிலம் ஹிசாரில் 9ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் வகுப்புத் தோழிகள் இருவர் தன்னை பெண் போல இருப்பதாகக் கேலி செய்ததால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். 14 வயது சிறுவன் தற்கொலைக்கு அவனது வகுப்புத் தோழிகள் இருவரும்தான் காரணம் என்று குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

சிறுவனின் பெற்றோரின் புகாரைத் தொடர்ந்து, திங்களன்று ஹிசார் காவல் நிலையத்தில் இரண்டு மாணவிகள் மற்றும் வகுப்பு ஆசிரியர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 305, 34 ஆகிய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

மகன் தற்கொலை செய்துகொண்ட செய்தி அறிந்ததும் துபாயில் பணிபுரியும் தந்தை உடனடியாக நாடு திரும்பியுள்ளார். அவர், தனது மகன் தொடர்ச்சியான துன்புறுத்தலால் மிகவும் விரக்தி அடைந்திருந்ததாகவும், வேறு பள்ளிக்கு மாற்றுமாறு தாயிடம் கூறிவந்ததாவும் சொல்கிறார். சிறுவனின் வகுப்பு ஆசிரியரிடம் இந்தப் பிரச்சினையைப் பற்றி புகார் கூறியபோது, அவர் சிறுமிகளின் சார்பாகவே பேசிவந்தார் என குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

சனிக்கிழமை காலை சிறுவனின் தாய் குழந்தைகளை உறவினர் வீட்டில் தங்கவைத்துவிட்டு கடைக்குச் சென்றிருக்கிறார். சிறுவனும் அவரது சகோதரியும் தனித்தனி அறையில் இருந்துள்ளனர். அப்போது 14 வயது சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் உடனே சிறுவனை கீழே இறக்கி மருத்துவமனைக்குக் கொண்டுசென்றபோதும், வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

“எங்கள் அம்மா சில மருந்துகள் வாங்க ஜிண்ட் நகருக்குச் சென்றிருந்தார். நாங்கள் ஒரு உறவினரின் வீட்டில் இருந்தோம். அன்றிரவு, என் சகோதரன் அவனுடைய வகுப்பு தோழர்கள் அவனைக் கொடுமைப்படுத்துவார்கள் என்று அஞ்சி மறுநாள் பள்ளிக்குச் செல்ல விரும்பவில்லை என்று என்னிடம் கூறினான். அவர்கள் அவனை ‘பெண்’ என்று அழைப்பார்கள். அதை சகிக்க முடியாமல் வகுப்பு ஆசிரியரிடம் புகார் அளித்தும் பயனில்லை” என்று சிறுவனின் சகோதரி சொல்கிறார்.

பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை இறுதிச் சடங்குகளுக்காக சிறுவனின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. “வகுப்பு ஆசிரியர் மற்றும் இரண்டு வகுப்பு தோழர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணையை தொடங்கியுள்ளோம். நாங்கள் இதுவரை தற்கொலைக் குறிப்பு எதையும் மீட்கவில்லை” என்று விசாரணை அதிகாரி ஏஎஸ்ஐ அனுப் கூறுகிறார்.

கடந்த ஆண்டு ஃபரிதாபாத்தில் ஏறக்குறைய அதே போன்ற சம்பவம் நடத்தது. ஒரு பத்தாம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் தனது தாய்க்கு எழுதிய கடிதத்தில், "இந்தப் பள்ளிக்கூடம் தான் என்னைக் கொன்றுவிட்டது" என்று எழுதியிருந்தார். அவரும் தனது வகுப்புத் தோழர்கள் சிலரின் தொல்லை தாங்க முடியாமல் தான் இந்த விபரீத முடிவுக்கு வந்ததாகக் கூறியிருந்தார்.

எந்தச் சிக்கலுக்கும் தற்கொலை தீர்வு அல்ல. தற்கொலை எண்ணம் எழுந்தால் உடனடியாக 104 என்ற எண்ணில் தொடர்புகொண்டு ஆலோசனைகளைப் பெறலாம்.

click me!