பெண் தாசில்தாரை கதற கதற எரித்துக் கொன்ற விவசாயி ! எதற்கு தெரியுமா ?

By Selvanayagam PFirst Published Nov 5, 2019, 7:42 AM IST
Highlights

தெலங்கானாவில் நிலப்பட்டா வழங்க லஞ்சம் கேட்ட பெண் தாசில்தாரை விவசாயி  ஒருவர் எரித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கான மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத் அருகே உள்ள ரங்கா ரெட்டி மாவட்டத்தில் அமைந்துள்ள அப்துல்லாபுர்மெட் பத்திரப்பதிவு அலுவலகம் ஒன்றில், வட்டாட்சியராக பணியாற்றி வந்தவர் விஜயா ரெட்டி. இந்த அலுவலகத்திற்கு, விவசாயி ஒருவர் 2, 3 மாதங்களாக  தனது நிலத்துக்கு பட்டா வழங்க வேண்டும் என கோரி சந்தித்து விட்டுச் சென்றுள்ளார்.

விவசாயிக்கு ஏற்பட்ட நிலப்பிரச்சனையை சரிசெய்ய வட்டாட்சியர் விஜயா ரெட்டி லஞ்சம் கேட்டதாக  கூறப்படுகிறது. ஆனால் பணம் தன்னிடமில்லை என்றும், முறையாகப் பிரச்சனையைச் சரிசெய்ய துறை ரீதியாக உதவும் படியும் அந்த விவசாயி கோரிக்கை வைத்துள்ளார். எனினும், அதை வட்டாட்சியர் விஜயா ரெட்டி கண்டுகொள்ளாமல் தொடர்ந்து லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று காலை அந்த விவசாயி சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்துக்கு சென்று  விஜயா ரெட்டியைச் சந்தித்துப் பேசியுள்ளார். இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் விவசாயி தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் பாட்டிலை எடுத்து விஜயா ரெட்டி மீது ஊற்றி கொளுத்திவிட்டு, தானும் தீக்குளித்துக்கொண்டார்.

எரியும் தீயுடன் அலுவலகத்தைவிட்டு வெளியேற முயற்சித்த விஜயா, தீயின் உக்கிரத்தைத் தாங்க முடியாமல் அங்கேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் வட்டாட்சியர் அலுவலகம் சென்று, விஜயாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பலத்த காயமடைந்த அந்த விவசாயி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், இந்த கொடூர சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!