ஹெல்மெட் அணிந்திருந்தார் ! சாலை விதிகளை கடைப்பிடித்தார் ! ஆனாலும் உயிரிழந்த சுபஸ்ரீ ! யார் பொறுப்பு !!

By Selvanayagam PFirst Published Sep 14, 2019, 8:50 AM IST
Highlights

அதிதீவிர பேனர் கலாச்சாரத்தால் உயிரிழந்த சுபஸ்ரீ  தனது டூ வீலரில் சென்றபோது ஹெல்மெட் அணிந்திருந்தார்,  சாலை  விதிகளை மதித்து நடந்து கொண்டார். ஆனாலும் அந்த இளம் பெண்ணின் உயிர் விபத்தில் பிரிந்தது. அதே நேரத்தில் சுபஸ்ரீ அணிந்திருந்த ஹெல்மெட் அந்த பெண்ணின் உயிரை காப்பாற்றவில்லையே என பொது மக்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

பள்ளிக்கரணை அருகே  அதிமுகவினர் வைத்த பேனர் அறுந்து சாலையில் சென்று கொண்டிருந்த  சுபஸ்ரீ என்ற பெண் என்ஜினியர் மீது விழுந்தததில் தடுமாறி கீழே விழுந்த அவர் மீது தண்ணீர் லாரி ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் பலியான சுபஸ்ரீயின் உடலை மீட்டு, இந்த வழக்கை யார் விசாரிப்பது? என பரங்கிமலை போக்குவரத்து போலீசாருக்கும், பள்ளிக்கரணை சட்டம்-ஒழுங்கு போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையில் சுபஸ்ரீயின் உடல் நீண்டநேரமாக சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தது.

சுமார் 2 மணிநேரத்துக்கு பிறகு பரங்கிமலை போக்குவரத்து போலீசார், பொதுமக்கள் உதவியுடன் சுபஸ்ரீயின் உடலை மீட்டு, போக்குவரத்து நெரிசல் காரணமாக சாலையின் எதிர்புறமாக தூக்கிச்சென்று மினிலோடு வேனில் ஏற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் சுபஸ்ரீ சாலையில் சென்றபோது அங்கு வைக்கப்பட்டிருந்த பேனர் பறந்து வந்து அவர் மீது விழுந்ததும், பின்னால் வந்த தண்ணீர் லாரி ஏறியதில் அவர் உயிரிழந்ததும் சிசிடிவி கேமரா மூலம் தெரிய வந்தது.

என்னதான் ஹெல்மெட் அணிந்து அந்தப் பெண்  சென்றாலும் அது அவரின் உயிரை காப்பாற்றவில்லை. தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய மோட்டார் வாகனச் சட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கும் போலீசார், இது போன்ற விபத்துகளை தடுக்க முன்வருவார்களா?  பேனர்கள் வைத்தால் அதை தூக்கி எறிவார்களா ?  என பொது மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஒரு புறம் மோசமான சாலைகள், சட்டத்தை மதிக்காமல் வைக்கப்படும் பேனர்கள் போன்ற பல்வேறு குறைகளை களைந்துவிட்டு பின்னர் இந்த அரசு புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல் படுத்தட்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

click me!