சிவகங்கை அருகே 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை அருகே 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடூரங்கள் அதிகரித்து வந்தன. ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் அத்தகைய கொடுமைகள் தொடர்ந்துகொண்டே தான் இருக்கின்றன. சிவகங்கையில் நடந்துள்ள இச்செயல் ஒட்டுமொத்த சமூகத்தின் மனசாட்சியையே உலுக்கியிருக்கிறது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த கொந்தகை கிராமத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி திருப்பாச்சேத்தியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது மூன்று பேர் சிறுமியை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று அப்பகுதியில் உள்ள சமுதாயக் கூடத்தில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
சிறுமியின் அலறல் சத்தம்கேட்டு அங்கு ஓடிய பொதுமக்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட மூன்று பேருமே சிறுவர்கள் ஆவர். சிறுமியை மீட்டு, மூன்று பொடிசுகளை பிடித்த பொதுமக்கள் அவர்களை திருப்பாச்சேத்தி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து மூன்று பொடிசுகள் மீதும் போக்சோவில் வழக்குப்பதிவு செய்து மானாமதுரை அனைத்து மகளிர் நிலைய போலீஸார் கைது செய்துள்ளனர். 5 வயது சிறுமி மூன்று சிறுவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது சிவகங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.