
நடிகர் சிம்புவின் கார் மோதி முதியவர் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஓட்டுநரை போலீசார் ஒரே நாளில் ஜாமீனில் விடுவித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தான்தோன்றித்தனமாக செயல்பட்ட ஒரு ஓட்டுநரால் ஒரு மனித உயிர் கொல்லப்பட்டுள்ள விஷயத்தில் காவல்துறை அலட்சியமாக செயல் பட்டிருப்பதை பலரும் கண்டித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் பிரபல கதாநாயகன்களில் ஒருவராக உள்ளார் சிம்பு. கடந்த சில நாட்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார், அந்த வீட்டில் உள்ள பலருக்கும் அவர் அறிவுரை கூறுகிறார் அதை பலரும் ரசித்து வருகின்றனர். இந்நிலையில் அவரது கார் சாலையை கடக்க முயன்ற முதியவரை ஏற்றி கொன்றுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது, ஆனால் இதுவரை இந்த விஷயத்தில் அவர் வாய்மூடி மௌனமாக இருந்து வருகிறார்.
கடந்த 18ஆம் தேதி இரவு 8:30 மணி அளவில் சென்னை தேனாம்பேட்டை இளங்கோ சாலையில் இன்னோவா கார் ஒன்று சென்றது. அப்போது அந்த சாலையை கடக்க முயன்ற மாற்றுத்திறனாளி முதியவர் மீது அந்த கார் அனாயசமாக ஏறி இறங்கி மின்னல் வேகத்தில் சென்று விட்டது. காரில் சிக்கிய முதியவர் ரத்த வெள்ளத்தில் மிதந்தார். அக்கம்பக்கத்தினர் முதியவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு சில நிமிடங்களில் அவர் உயிரிழந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த முதியவர் தியாகராயநகர் டாக்டர் தாமஸ் ரோடு பகுதியை சேர்ந்த முனுசாமி (70) என்பதும் அவர் சாலையோரத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளி என்பதும் தெரியவந்தது.
விபத்து ஏற்படுத்திய கார் பிரபல நடிகர் சிம்புவுக்கு சொந்தமானது என்பதும், விபத்து நடந்த போது காரில் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் மற்றும் அவரது குடும்பத்தினர் இருந்ததாக கூறப்படுகிறது. விபத்து நடந்தபோது காரில் சிம்பு இல்லை என்பதும் தெரியவந்தது. விபத்தை ஏற்படுத்திய கார் நடிகர் சிம்புவில் பெயரில் இருப்பதும் தெரியவந்தது அந்த காரை ஓட்டுனர் செல்வம் (28) ஓட்டு வந்ததாகவும் அவர் மீது பாண்டிபஜார் போக்குவரத்து போலீசார் பிரிவு 304 A (அலட்சியமாக வாகனம் ஓட்டியதால் ஏற்படும் மரணம்) என்ற பிரிவின் கீழ் டிரைவர் செல்வத்தை கைது செய்தனர். பிறகு ஒரே நாளில் காவல் நிலைய பெயிலில் அவரை விடுவித்தனர். காவல் துறையின் இந்த செயல் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதைப் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் மாநில பொதுச்செயலாளர் நம்பிராஜன், தான்தோன்றித்தனமாக கார் ஓட்டி வந்து மாற்றுத்திறனாளி முதியவரை ஏற்றுக்கொன்ற ஓட்டுனர் செல்வத்தை பிணையில் விடுதலை செய்துள்ளனர். இது பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு காவல்துறையில் அலட்சியத்தை காட்டுகிறது. அநியாயமாக ஒரு மனித உயிர் கொல்லப்பட்டுள்ள நிலையில் இது அலட்சியத்தால் நடந்த மரணம் என்று எப்படி அவர்கள் சொல்ல முடியும்? இது யாருடைய அலட்சியம், ஓட்டுநருடையதா? காவல்துறையினருடையதா? என கேள்வி எழுப்பி உள்ளார்.
சாலையோரத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளி என்பதால் தான் காவல்துறை இந்த விஷயத்தில் இந்த இவ்வளவு அலட்சியம், மெத்தனமாக நடந்து கொண்டுள்ளது என்றும், இதே வேறு சிலருக்கு ஏற்பட்டிருந்தாலோ அல்லது சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் இருப்பவர்களுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தாலோ காவல்துறையின் நடவடிக்கைகள் இப்படித்தான் இருந்திருக்குமா? எந்த அளவிற்குதான் அலட்சியமாக நடந்தி கொண்டிருப்பார்களா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். சாலையில் வசிப்பவர்களின் உயிர், உயிர் இல்லையா? அதற்கு மதிப்பு இவ்வளவுதானா? பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நின்று பேச வேண்டிய காவல்துறை குற்றம் நிகழ்த்தியவர்களுக்கு சாதகமாக செயல்படுவது நியாயம்தானா?
இதுபோன்ற வழக்குகளில் காவல்துறை இப்படி நடந்து கொள்வது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும், விபத்து ஏற்படுத்தினால் எளிதில் தப்பித்துக் கொள்ளலாம் என்ற மனநிலையைதான் சமூகத்தில் இது ஏற்படுத்தும் என்றும் விமர்சித்து வருகின்றனர். தவறிழைத்தவர்கள் சட்டத்தின் ஓட்டையை பயன்படுத்தி தப்பிப்பதற்கு முயற்சிக்கலாம், ஆனால் மனித நேயம் மனச்சான்று படி காவல்துறை இதற்கு இடம் கொடுக்கலாமா? இறந்தவர்களுக்கு நியாயம் தேடித் தர வேண்டாமா? என்றும் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.