
டெல்லியை அடுத்த நசாஃப்கர் பகுதியில் வசித்து வருபவர் 85 வயதான அசோக் குமார். இவர் தனது வீட்டில் ஆசை ஆசையாக நாய் ஒன்றை செல்லப் பிராணியாக வளர்த்து வந்தார். இவரது மனைவி மீனாவுக்கும் அந்த நாய் மீது பாசம் இருந்தது. இருவரும் அந்த நாயை செல்லமாக வளர்த்து வந்தனர்.
இந்த நிலையில், இவர்கள் வளர்த்து வரும் அடிக்கடி குரைத்துக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. நாய் அடிக்கடி குரைத்து வந்தது, அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுவனுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த வாரம் நாய் குரைத்ததில் அதிக கோபமுற்ற சிறுவன், நாய் வளர்க்கப்பட்டு வரும் வீட்டினுள் நுழைந்து அதனை கடுமையாக தாக்கினான்.
நாய் தாக்கப்படுவதை கண்ட அதன் உரிமையாளர் உடனே சிறுவனை தடுத்து நாயை காப்பாற்ற முயன்று இருக்கிறார். இதனிடையே சிறுவன் மற்றும் 85 வயதான முதியவருக்கும் கடும் வாக்குவாதம் நடைபெற்றது. வாக்குவாதம் முற்றியதில், சிறுவன் தன் கையில் இருந்த இரும்பு கம்பியை கொண்டு முதியவர் என்றும் பாராமல் மிக கடுமையாக தாக்கினான். சிறுவன் தாக்குதலில் நிலை தடுமாறிய முதியவர் அதே இடத்தில் கீழே விழுந்தார்.
கீழே விழுந்த முதியவர் உடனடியாக அருகில் இருந்த மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட முதியவர், சிகிச்சை பலன் இன்றி கடந்த ஞாயிற்றுக் கிழமை உயிரிழந்தார். கணவர் உயிரிழந்ததை அடுத்து அவவரை தாக்கிய சிறுவன் மீது மனைவி மீனா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மீனா கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் 17 வயது சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
"சிறுவன் கடும் கோபத்துடன் நாயை தாக்கினான். நாய் தாக்கப்படுவதை தடுக்கவே என் கணவர் குறுக்கிட்டார். எனினும், முதியவர் என்றும் பாராமல், சிறுவன் தன் கையில் இருந்த இரும்பு கம்பியால் என் கணவரை தாக்கினான்," என மீனா காவல் துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
முதியவர் நிலை தடுமாறி கீழே விழுந்ததும், அந்த பகுதியில் இருந்து தப்பி ஓடிய சிறுவனை பிடிக்க காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாய் குரைத்ததில் அதிக கோபம் அடைந்த சிறுவன், கொலை குற்றவாளியாகி இருக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.