
10ம் வகுப்பு பள்ளி மாணவியை 7 பேர் பலாத்காரம் செய்து கிணற்றில் வீசி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயது மாணவி கொங்கரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 11ம் தேதி மாலை மாணவி திடீரென்று மாயமானார். இதனையடுத்து, அவரது உறவினர்கள் மற்றும் பெற்றோர் பல்வேறு இடங்களில் அவரை தேடிவந்துள்ளனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனையடுத்து, மகளை காணவில்லை என்று பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், 2 நாள் கழித்து கொங்கரப்பட்டில் உள்ள ஒரு கிணற்றில் மாணவியின் சடலம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் மாணவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா அங்கு வந்து விசாரணை நடத்தினார். அப்போது எஸ்பியை முற்றுகையிட்ட கிராம மக்கள், இச்சம்பவத்திற்கு காரணமானவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என முறையிட்டனர். இதனையடுத்து, விசாரணையை தீவிரப்படுத்திய காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக மணியம்பட்டு கிராமத்தை சேர்ந்த மகாலிங்கம் (19), ஜெயக்குமார்(24), ஜெயபிரகாஷ் (30), ஜெயபால் (28), ராஜா (30),ஆனந்த் (23) மற்றும் ஜெயமூர்த்தி (22) உள்ளிட்ட 7 பேர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவியின் முகத்தில் காயங்கள் இருப்பதால், அவரை 7 பேர் பலாத்காரம் செய்து அடித்து கொலை செய்து கிணற்றில் வீசினார்களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.