சிறை தண்டனை பெற்ற 1 மணி நேரத்தில் ஜாமீன் !! அசத்திய சரிதா நாயர் !!

By Selvanayagam PFirst Published Nov 1, 2019, 9:09 PM IST
Highlights

சோலார் பேனல்  மோசடி வழக்கில் நடிகை சரிதா நாயர், பிஜு ராதாகிருஷ்ணன், மேலாளர் ரவி ஆகியோருக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து கோவை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் ஒரு மணி நேரத்தில்  அவர் ஜாமீன் பெற்றுள்ளார்.

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் நடிகை சரிதா நாயர். இவர் 2008ஆம் ஆண்டு கோவை வடவள்ளியில் ‘ஐசிஎம்எஸ்' என்ற பெயரில் காற்றாலை உபகரணங்களை விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்திவந்தார்.

இவர் கோவையைச் சேர்ந்த தியாகராஜன் மில்ஸ் சேர்மன் தியாகராஜனிடம் ரூ.26 லட்சம், ஊட்டியைச் சேர்ந்த ஸ்ரீ அபு பாபாஜி தொண்டு அறக்கட்டளை நிர்வாகிகள் வெங்கட்ரமணன், ஜோயோவிடம் ரூ.7 லட்சம் பணத்தைப் பெற்றுக்கொண்டு காற்றாலை அமைத்துத் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக கோவை மாவட்ட குற்றப்பிரிவுக் காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதன்பேரில் நடிகை சரிதா நாயர், அவரது கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன், மேலாளர் ரவி ஆகியோர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை,கோவை ஜே.எம்.6 நீதிமன்றத்தில் நடந்துவந்தது.

இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தபோதே கணவர் பிஜூ ராதாகிருஷ்ணை, நடிகை சரிதா நாயர் விவாகரத்து செய்தார். இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த மோசடி வழக்கு ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இதையடுத்து இந்த வழக்கில் நேற்று  நீதிபதி கண்ணன் தீர்ப்பளித்தார்.

அதில் சோலார் பேனல் மோசடி வழக்கில் சரிதா நாயர், அவரது முன்னாள் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன், மேலாளர் ரவி ஆகியோருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

சரிதா நாயரின் முன்னாள் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன், இந்த வழக்கில் ஏற்கனவே சிறையில் இருந்ததால் அந்தக் காலத்தை தண்டனை காலத்தில் கழித்துக்கொள்ள வேண்டும் என நீதிமன்றத்தில் மனு அளித்தார். அந்த மனுவை நீதிமன்றம் பரிசீலித்துவருகின்றது.

இதனிடையே, தீர்ப்பு வழங்கிய ஒரு மணி நேரத்தில் சரிதா நாயர்  ஜாமீன் பெற்று விட்டுக்கு திரும்பிச் சென்றார்.

click me!