
கேரளத்தில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றிரவு எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த நபர் கொலை செய்யப்பட்ட நிலையில், தற்போது பழிக்கு பழியாக ஆர்.எஸ்.எஸ் தொண்டர் மர்மகும்பலால் படுகொலை செய்யப்பட்டுள்ளாரா..? எனும் கோணத்தில் விசாரணை முடுக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் பாலக்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர். இன்று இவரது கடைக்கு இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல், சீனிவாசனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்து அங்கிருந்து தப்பி சென்றது. இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இதுக்குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொலைக்கு பிஎஃப்ஐ தான் காரணம் என்று அம்மாநில பாஜக குற்றச்சாட்டியுள்ளது. படுகொலை செய்யப்பட்ட சீனிவாசன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முன்னாள் சாரிரீக் பிரமுக் ஆவார்.பாலக்காடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த இரண்டாவது கொலை நடந்துள்ளதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவு வருகிறது. மேலும் பிரச்சனை ஏற்படக்கூடிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று பாலக்காடு எலப்புள்ளியை சேர்ந்த SDPI கட்சியின் நிர்வாகி சுபைர் வெட்டிக் கொல்லப்பட்டார். நேற்று இவரும், இவரது தந்தையும் ஒரு மோட்டார் சைக்கிளில் அருகில் உள்ள பள்ளி வாசலுக்கு தொழுகைக்கு சென்றபோது, அந்த வழியாக வேகமாக வந்த கார் இவர்கள் மீது மோதியது. இதில் அபுபக்கரும், அவரது மகன் சுபைரும் தூக்கி வீசப்பட்டனர். அப்போது காரில் இருந்து இறங்கிய மர்ம கும்பல் சுபைரை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்து, அங்கிருந்து தப்பித்தனர். இந்த கொலையின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் இருப்பதாக பாப்புலர் ஃப்ரண்ட் குற்றம்சாட்டி வரும் நிலையில் RSS பிரமுகர் தற்போது கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலக்காடு பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ் தொண்டர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். அந்த சம்பவத்திற்கு பழிக்கு பழியாக சுபைர் கொல்லப்பட்டாரா? என்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் 24 மணி நேரத்திற்குள், இரண்டாவது கொலை சம்பவம் அரங்கேறியது கேரளா அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.