
சென்னையில் விசாரணைக்கு அழைத்து வந்த கைதி காவல் நிலையத்தில் வலிப்பு ஏற்பட்டு சந்தேகமான முறையில் உயிரிழந்ததால் மேஜிஸ்ட்ரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை புரசைவாக்கம் கெல்லீஸ் சிக்னல் அருகே நேற்றிரவு தலைமை செயலக காலனி காவல் நிலைய உதவி ஆய்வாளர் புகழ் பெருமாள் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்த போது, ஆட்டோவில் சந்தேகத்திற்கிடமாக இருவர் இருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அவர்களை சோதனை செய்த போது இடுப்பில் ஒரு அடி நீலமுள்ள பட்டாக்கத்தி மற்றும் 10 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் கத்தியை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை கைது செய்து அயனாவரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் திருவல்லிக்கேணியை சேர்ந்த ரமேஷ் @ ஜொல்லு சுரேஷ்(28) என்பதும், பட்டினப்பாக்கத்தை சேர்ந்த ரவுடி விக்னேஷ்(25) என்பதும் தெரியவந்தது. பெயிண்டர் வேலை செய்து வரக்கூடிய ரமேஷ் மீது ராஜமங்கலம், கண்ணகி நகர், மெரினா, துரைப்பாக்கம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை முயற்சி, வழிப்பறி உட்பட பல வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
மேலும் குதிரை ஓட்டுபவரான விக்னேஷ் மீது மெரினா, பட்டினம்பாக்கத்தில் இரவு நேரத்தில் வீடு புகுந்து திருடும் வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. மேலும் கைது செய்யப்பட்ட இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி உள்ளனர். இதனையடுத்து இன்று காலை 7.30 மணியளவில் தலைமை செயலக காலனி காவல் நிலையத்திற்கு இரண்டு பேரை அழைத்து வந்து விசாரணை நடத்திய போது, திடீரென ரவுடி விக்னேஷிற்கு வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே விக்னேஷை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வரும் வழியிலேயே விக்னேஷ் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
விசாரணை கைதி காவல் நிலையத்தில் சந்தேகமான முறையில் மரணித்து இருப்பதால் இணை ஆணையர் பிரபாகரன் நேரடியாக தலைமை செயலக காலனி காவல் நிலையத்திற்கு வந்து கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் கார்த்திகேயன் மற்றும் உயிரிழந்த விக்னேஷிடம் விசாரணை நடத்திய உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், தலைமை காவலர் தீபக், காவலர் பவுன்ராஜிடம் விசாரணை மேற்கொண்டார். மேலும் இந்த சந்தேக மரணம் தொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேகமான முறையில் இறந்த விக்னேஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேஜிஸ்ட்ரேட் மேற்பார்வையில் பிரேத பரிசோதனை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் காவல் நிலையத்தில் சந்தேக மரணம் அடைந்திருப்பதால் வழக்குபதிவு செய்து தலைமை செயலக காலனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டப்பேரவை நடந்து கொண்டிருக்கும் வேளையில் காவல் நிலையத்தில் விசாரணை கைதி சந்தேக மரணம் அடைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக விக்னேஷ் வலிப்பு வந்ததன் காரணமாகத்தான் உயிர் இழந்தாரா அல்லது போலீசார் கடுமையாக தாக்கியதன் காரணத்தினால் உயிரிழந்தாரா என்பது தொடர்பாக மேஜிஸ்ட்ரேட் விசாரணைக்கு பின்புதான் தெரிய வரும்.