யானைக்கு தீ வைத்த காட்டு மிருகங்களுக்கு செம ஆப்பு... காவல்துறை தீவிர நடவடிக்கை..!

By Thiraviaraj RMFirst Published Jan 23, 2021, 12:57 PM IST
Highlights

முதுமலையில் யானையை தீ வைத்து கொன்ற மூவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளதாக முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கே.கே.கௌசல் தகவல் தெரிவித்துள்ளார். 
 

முதுமலையில் யானையை தீ வைத்து கொன்ற மூவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளதாக முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கே.கே.கௌசல் தகவல் தெரிவித்துள்ளார். 

சாக்குப்பையில் பெட்ரோல் ஊற்றி தீவைத்து யானை மீசு வீசியுள்ளனர். யானையின் காதில் தீப்பற்றி எரியும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவான நபரை போலீசார் தேடி வருகின்றனர். 
 

நீலகிரி மாவட்டம், மசினகுடியில் கடந்த 19ம் தேதி உயிரிழந்த காட்டு யானையை தீ அல்லது ஆசிட் போன்ற திரவத்தால் கொடூரமாக தாக்கியிருப்பது பிரேத பரிசோதனையின் மூலமாக தெரியவந்தது. மசினகுடி பகுதியில் சில மாதங்களாக 40 வயது மதிக்கத்தக்க காட்டு யானை சுற்றி திரிந்தது. முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்ட அந்த யானைக்கு கடந்த மாதம் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து,  2 நாட்களுக்கு முன் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மீண்டும் தாக்கியதில் யானையின் இடது காது கிழிந்து ரத்தம் கொட்டியது. இதனையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அந்த யானையை வனத்துறையினர் முதுமலை வளர்ப்பு யானை முகாமிற்கு அழைத்து சென்றனர்.

யானையை பரிசோதனை செய்ததில் யானையின் காது பகுதியை பெட்ரோல் வைத்து எரித்ததற்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன. மேலும் யானை மீது ஆசிட் ஊற்றி காயப்படுத்தியிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.  இதன் காரணமாக காது பகுதி வெந்து யானை துடிதுடித்து இறந்ததும் தெரியவந்தது. இந்த காயத்தினால் யானையின் உடலில் இருந்து சுமார் 40 லிட்டர் வரை ரத்தம் வெளியேறியிருந்தது. 

யானையின் முதுகு பகுதியில் ஏற்பட்டிருந்த பழைய காயத்தால் யானையின் 2 விலா எலும்புகள் துண்டிக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற காரணங்களால் யானை உயிரிழந்திருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. யானையின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபர் குறித்து வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. டயரில் தீ வைத்து காட்டு யானையின் மீது வீசிய சம்பவத்தில் ரிசார்ட் உரிமையாளர் ரைமன், பிரசாந்த் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். 

click me!