கடந்த 2021ம் ஆண்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்த வெற்றிச்செல்வன், மோகன்ராஜ் ஆகிய இருவரும் தி.நகரில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி இருந்தனர்.
பாலியல் பலாத்கார வழக்கில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா 2வது அலை கோரத்தாண்டவம் ஆடிய போது அரசு மருத்துவர்கள் சிகிச்சை பணியில் ஈடுபட்டு வருவதால், அவர்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் அரசு செலவில் தனியார் ஓட்டலில் அறைகள் ஒதுக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்த வெற்றிச்செல்வன், மோகன்ராஜ் ஆகிய இருவரும் தி.நகரில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி இருந்தனர்.
அதே மருத்துவமனையில் பணியாற்றிய இரண்டு பெண் மருத்துவர்களும் அதே விடுதியில் தங்கி இருந்தனர். அப்போது, மருத்துவர் வெற்றிச்செல்வன் பெண் மருத்துவர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மற்றொரு மருத்துவர் மோகன்ராஜ் இன்னொரு பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுதொடர்பாக இரு பெண் மருத்துவர்களும் ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனையின் டீன் தேரணிராஜனிடம் புகார் அளித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதில் பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியானது.
இதனையடுத்து, ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனையின் டீன் தி.நகர் காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல்துறை விசாரணை நடத்திய பிறகு வெற்றிச்செல்வன் மீது பாலியல் பலாத்கார வழக்கும், மற்றொரு மருத்துவர் மோகன்ராஜ் மீது பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்குப்பதிவு செய்து இரண்டு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து, இரண்டு மருத்துவர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு சென்னை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் நேற்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதில், பாலியல் பலாத்கார வழக்கில் மருத்துவர் வெற்றிச்செல்வனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.