புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை பகுதியில் 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி வெளியூருக்கு கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள திருணாகுளம் கிராமத்தைச் சேர்ந்த சசிகுமார் என்பவரின் மகன் வீரமணி (வயது 25). கூலி வேலை செய்து வந்தார். கடந்த 13.11.2021 அன்று புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருப்பூருக்கு கடத்தி சென்றுள்ளார். மேலும் சிறுமியின் பெற்றோர் 14.11.2021 அன்று புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து 29/11/2021 அன்று திருப்பூரில் இருந்த சிறுமியை அதிகாரிகள் மீட்டனர். மேலும் சிறுமியின் உடலில் ஏற்பட்ட மாற்றங்களை கண்டு உடல் பரிசோதனை செய்யும் பொழுது அவர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட வீரமணியை புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இன்று மதியம் 12 மணி அளவில் மகிளா நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பில் நீதிபதி சத்யா வீரமணி குற்றவாளி என அறிவித்தார்.
மேலும் 17 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்திய குற்றத்திற்காக வீரமணிக்கு ஆயுள் தண்டனையும், 2.5 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்வு வழங்கினார். மேலும் அந்த அபராத தொகையில் 2 லட்சம் ரூபாயை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து தண்டனை பெற்ற வீரமணியை திருச்சி மத்திய சிறையில் அடைக்க காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.