புதுவையில் கணவன் - மனைவி கொலை வழக்கில் திடீர் திருப்பம்... 2 பேர் அதிரடி கைது

By vinoth kumarFirst Published Nov 22, 2018, 4:21 PM IST
Highlights

புதுவையில் கணவன், மனைவியை கொன்று நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

புதுவையில் கணவன், மனைவியை கொன்று நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

புதுவை நெல்லித்தோப்பு, அண்ணா நகர் விரிவாக்கம், 14-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (72). வழக்கறிஞரான இவர் என்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் தேனீ.ஜெயக்குமாரின் சம்பந்தி ஆவார். இவரது மனைவி ஹேமலதா (68), 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். பிரெஞ்சு குடியுரிமை பெற்ற பாலகிருஷ்ணன் தனது மனைவியுடன் சொந்த அடுக்குமாடி வீட்டில் வசித்து வந்தார். அவரது மகன்கள், மகள் ஆகியோர் பிரான்சில் உள்ளனர். வீட்டின் கீழ்தளத்தில் பாலகிருஷ்ணன் வசித்தார். 2வது மாடி வாடகைக்கு விடப்பட்டுள்ளது. 

முதல் மாடி வாடகைக்கு விடப்படும் என போர்டு மாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று காலை அவரது வீட்டுக்கு நண்பர் ஒருவர் வந்துள்ளார்.  அப்போது பாலகிருஷ்ணன் அங்குள்ள கட்டில், பீரோ இருந்த பகுதியில் கழுத்தில் வெட்டுக் காயத்துடன் இறந்து கிடந்தார். கட்டிலில் ேஹமலதாவின் பிணம் கிடந்தது. அவருக்கு மேல் மெத்தை கிடந்தது. பீரோக்கள் திறந்த நிலையில் பொருட்கள் சிதறி அலங்கோலமாக கிடந்தன.

உடனடியாக இதுபற்றி உருளையன்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து டிஜிபி சுந்தரி நந்தா, டிஐஜி சந்திரன், சீனியர் எஸ்பி அபூர்வா குப்தா, கிழக்கு எஸ்பி மாறன் ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர். வீட்டிலிருந்த குடும்ப படத்தில் பாலகிருஷ்ணன், ஹேமலதா முகம் வட்டமிடப்பட்டிருந்தது. அதை போலீசார் கைப்பற்றினர். 

இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசார் கொலை வழக்கு பதிந்து நடத்திய விசாரணையில், மர்ம கும்பல் வீடுபுகுந்து பாலகிருஷ்ணனை கழுத்தில் கத்தியால் வெட்டியும், அவரது மனைவியை தலையணையால் முகத்தில் அழுத்தியும் படுகொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து விசாரணையை தீவிரப்படுத்தினர். 

பாலகிருஷ்ணன் வீட்டில் வேலை செய்பவர்கள் குறித்த தகவலை சேகரித்தனர். பாலகிருஷ்ணன் சொந்தமாக கார் வைத்துள்ளார். இந்த காரை தேனீ.ஜெயக்குமாரின் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். தேனீ.ஜெயக்குமாரின் டிரைவர் வர முடியாத நேரத்தில் கோட்டக்குப்பத்தை சேர்ந்த முகமது காசிம் என்பவர் டிரைவராக வருவார் என்ற தகவல் வெளியானது. 

இந்த கொலை தொடர்பாக முதற்கட்டமாக தேனீ.ஜெயக்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அடுத்தக்கட்டமாக முகமது காசிமை தொடர்பு கொள்ள முயன்ற போது அவரது சுவிட்ச்-ஆப்’ செய்யப்பட்டு இருந்தது. இதனால் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரது செல்போன் எண்ணை வைத்து 2 நாட்களில் எந்தெந்த பகுதிகளில் எல்லாம் நடமாடி உள்ளது என்பதை செல்போன் நிறுவனம் மூலம் தகவல் திரட்டினர். நேற்று முன்தினம் மதியம் நீண்ட நேரமாக கொலை நடந்த பகுதியில் அந்த செல்போன் நடமாட்டம் இருந்தது தெரிந்தது. 

அப்போது கோட்டக்குப்பத்தை சேர்ந்த முகமது இலியாஸ் என்பவரிடம் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியுள்ளார். எனவே அவருடைய நடமாட்டத்தையும் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். இதற்கிடையே முகமது காசிம் வேரு ஒரு காரில் டிரைவர் பணிக்காக சென்னை சென்று இருப்பது தெரிய வந்தது. எனவே, அவர் வருகைக்காக போலீசார் ரகசியமாக காத்து இருந்தனர். பிறகு அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

முதலில் கொலைக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறினார். பிறகு கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். அவரது நண்பர் முகமது இலியாசுடன் சேர்ந்து கொலை செய்ததாக தெரிவித்தார். அவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

click me!