இறுதி கட்டத்தை எட்டியுள்ள கொடநாடு கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி யார் ? சசிகலாவிடம் போலீசார் இன்று விசாரணை..

By Ajmal KhanFirst Published Apr 21, 2022, 8:38 AM IST
Highlights

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தனிப்படை போலீசார் சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான் சசிகலாவிடம் விசாரணை நடத்த உள்ளனர்.
 

கொடநாட்டில் கொலை, கொள்ளை

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோருக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவ்வப்போது சென்று ஓய்வு எடுத்து வந்தார். இதனையடுத்து கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவிற்கு பிறகு  கொடநாடு எஸ்டேட்டில் 2017 ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ணா தாபா படுகாயம் அடைந்தார். மேலும் பங்களாவில் இருந்து முக்கிய ஆவணங்கள் மற்றும் சில பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டது. 

200க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை

இந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் சேலத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்தார்.கொடநாடு எஸ்டேட்டில் கணினி ஆபரேட்டராக வேலை செய்து வந்த தினேஷ் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ், திபு உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர்.  இந்த கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு நீலகிரி மாவட்ட கோர்ட்டில் நடந்து வருகிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், கோடநாடு வழக்கு விவகாரம் தொடர்பான விசாரணை மீண்டும் தீவிரமடைந்தது. மேற்கு மண்டல ஐஜி சுதாகர், கோவை சரக டிஐஜி முத்துசாமி ஆகியோரது நேரடி மேற்பார்வையில் நீலகிரி மாவட்ட போலீஸார் அடங்கிய தனிப்படைகள் ஏற்படுத்தப்பட்டன. இந்த தனிப்படையினர் எஸ்டேட் மேலாளர் நடராஜன், சசிகலாவின் உறவினர் விவேக் ஜெயராமன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். இதற்கிடையே ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இந்தநிலையில் இன்று காலை மேற்கு மண்டல் போலீஸ் ஐ.ஜி சதாகர் தலமையிலான போலீசார் சசிகலாவிடம் விசாரணை நடத்த உள்ளனர்.

சசிகலாவிடம் இன்று விசாரணை

 இந்த விசாரணையின் போது கோடநாடு வழக்கு தொடர்பான கூடுதல் தகவல்களைப் பெற சசிகலாவிடம் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர். கோடநாடு எஸ்டேட்டின் உரிமையாளர்களில் ஒருவர் சசிகலா என்பதால், எஸ்டேட் வளாகத்துக்குள் உள்ள பொருட்கள் குறித்து ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட சிலருக்கே தெரியும். எனவே, கோடநாடு எஸ்டேட் வளாகத்துக்குள் என்னென்ன பொருட்கள் இருந்தன? அதில் காணாமல் போன பொருட்கள் என்னென்ன என்பன குறித்து சசிகலாவிடம் விசாரிக்க உள்ளனர். மேலும் முன்னாள் அமைச்சர்கள் தொடர்பாக ஏதேனும் முக்கிய ஆவணங்கள் கொடநாடு பங்களாவில் இருந்ததா என்பது குறித்து விசாரிக்க உள்ளனர். இந்த வழக்கின் விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் கொடநாடு எஸ்டேட் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி விரைவில் கைது செய்யப்பட வாயப்பு இருப்பதாக கூறப்படுகிறது.


 

click me!