
மத்திய சென்னையில் பாமகவினரின் பணப்பட்டு வாடாவை தடுத்த திமுக பகுதி செயலாளர் வீட்டின் மீது நேற்று காலையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் அவரது கார் பலத்த சேதமடைந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவி வருகிறது. சம்பவம் நடந்த நிர்வாகி வீட்டை தயாநிதி மாறன் பார்வையிட்டார்.
மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியில் தயாநிதி மாறன் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் சாம் பால் போட்டியிடுகிறார். இத்தொகுதிக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு வாக்காளர்களுக்கு அமமுக, பாமக மற்றும் எஸ்டிபிஐ கட்சியினர் பணப் பட்டுவாடா செய்தனர். இதை அறிந்ததும் அண்ணாநகர் பகுதி திமுக செயலாளர் பரமசிவன் மற்றும் நிர்வாகிகள் நேரில் சென்று, பணப் பட்டுவாடாவை தடுத்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அமைந்தகரை போலீஸ் ஸ்டேஷனில் இரு தரப்பினரும் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில், அண்ணாநகர் அருகே டி.பி.சத்திரம், தர்மராஜா கோயில் சந்து பகுதியில் உள்ள திமுக பகுதி செயலாளர் பரமசிவன் வீட்டின் மீது நேற்று காலை 7 மணியளவில் மர்ம கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசியது. இதில் பரமசிவனின் கார் முன்பகுதி தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்தது.
தகவல் அறிந்ததும் மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன், அண்ணாநகர் எம்எல்ஏ எம்.கே.மோகன் உட்பட பல்வேறு நிர்வாகிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் அங்கு ஏராளமான தொண்டர்களும் குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தனது வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு நடந்தது குறித்து டி.பி.சத்திரம் போலீசில் பரமசிவன் புகார் அளித்தார்.
புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து ஆய்வு செய்து மர்ம கும்பல் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் குண்டு வீசப்பட்ட பகுதியில் இருந்து சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது 3 பைக்குகளில் வந்த 6 பேர் கும்பல், ஹெல்மெட் மற்றும் முகத்தை மூடிக் கொண்டு வந்து பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்ததை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.