சபலத்தோடு மலை உச்சிக்குப் போய் சடலமான தொழில் அதிபர்... பெண்ணின் ஃபேக் ஐடியை நம்பி ஃப்ளைட் ஏறி வந்த பரிதாபம்...

By Muthurama LingamFirst Published Feb 6, 2019, 12:18 PM IST
Highlights

வாங்கிய கடனைத் திருப்பித் தராத ஆத்திரத்தில், ஒரு பெண்ணின் மூலம் வாட்ஸ் அப்பில் வலை விரித்து, ஒரு தொழிலதிபர் கொல்லப்பட்டிருக்கும் செய்தி ஆந்திராவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒரு ஃபேக் ஐடியை நம்பி ஃப்ளைட் பிடித்து ஆந்திராவுக்கு வந்திருக்கிறார் இவர்.

வாங்கிய கடனைத் திருப்பித் தராத ஆத்திரத்தில், ஒரு பெண்ணின் மூலம் வாட்ஸ் அப்பில் வலை விரித்து, ஒரு தொழிலதிபர் கொல்லப்பட்டிருக்கும் செய்தி ஆந்திராவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒரு ஃபேக் ஐடியை நம்பி ஃப்ளைட் பிடித்து ஆந்திராவுக்கு வந்திருக்கிறார் இவர்.

ஆந்திராவின் விஜயவாடா அருகே கிருஷ்ணா மாவட்டத்தில் ஜனவரி 31ம் தேதி காரிலேயே கொலை செய்யப்பட்ட நிலையில் தொழிலதிபர் உடல் கண்டெடுக்கப்பட்டது. கொலை செய்யப்பட்டவர் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல தொழில்களை செய்து வந்த ஜிகுருப்பட்டி ஜெயராம் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். சமீப ஆண்டுகளாக வெளிநாட்டில் வசித்து வந்த ஜெயராம் ஆந்திராவுக்கு வந்தது ஏன்? அவரை கொலை செய்தது யார் ? என்று தெரியாமல் போலீசார் திணறி வந்தனர்.

இந்நிலையில் ஜெயராம் கொலையில் போலீசார் துப்புதுலக்கியுள்ளனர். கொலையாளி ராகேஷ் ரெட்டியையும் போலீசார் கைது செய்துள்ளனர்.கொலை தொடர்பான விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்களை ஜெயராம் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கொலை தொடர்பாக பேசிய காவல்துறை அதிகாரி, தொழிலதிபர் ஜெயராம் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் தெரிவித்த அவர், தொழிலதிபர் ஜெயராம் புளோரிடாவில் வசித்து வந்துள்ளார். அடிக்கடி தொழில்ரீதியாக ஹைதராபாத் வந்து செல்வது அவரது வழக்கம். அவர் ராகேஷ் ரெட்டியிடம் பல கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளார். ஆனால் தொழில் நஷ்டப்படவே கடனை திருப்பி கொடுக்காமல் இருந்துள்ளார். கடனை திருப்பிக்கேட்டு ராகேஷ் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வெளிநாட்டுக்கு சென்ற ஜெயராம், ராகேஷை முற்றிலும் தவிர்த்துள்ளார். ராகேஷ் தொடர்பான செல்போன் எண்களையும் பிளாக் செய்துள்ளார். 

இதனால் ஜெயராமை இந்தியாவுக்கு கொண்டு வர ராகேஷ் திட்டமிட்டுள்ளார். அதற்காக பெண்ணின் பெயரில் வாட்ஸ் அப் எண்ணை தயார் செய்து ஜெயராமனுடன் தொடர்ந்து சாட் செய்துள்ளார். அடுத்தபடியாக ஒரு பெண் மூலமாக போனிலும் பேசி,  தனியாக சந்திக்க வேண்டுமென்று ஆசை வார்த்தைகளையும்  கூறி ஜெயராமை ஜூபிலி மலைப்பகுதிக்கு வரவழைத்துள்ளனர்.

ஒரு பெண்ணைச் சந்திக்கப்போகிறோம் என்ற சபலத்தோடு வந்த  அவரை ராகேஷும் அவரது கூட்டாளிகளும் கொலை செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஜெயராமின் உடலை அப்புறப்படுத்த இரண்டு தெலங்கானா போலீசாரும் உதவி செய்துள்ளதாக தெரிவித்தார்.

சிசிடிவி காட்சிகளை கொண்டு நடத்தப்பட்ட விசாரணையை வைத்தே கொலையாளி கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஜெயராமனின் உடல் அருகே கிடந்த காலி மது பாட்டில்களை கொண்டு விசாரணையை தொடங்கிய காவல்துறையினர், அதே மாதிரியான மது பாட்டில்களை வாங்கியவர்களை சிசிடிவி மூலம் கண்டுபிடித்து கொலையில் துப்புதுலக்கியுள்ளனர்.

click me!